உக்ரைன்-ரஷ்யா முதல் நேரடிப் பேச்சுவார்த்தை: உறுதிப்படுத்தப்பட்ட மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம்
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் புதிய திருப்பமாக அமைதி முயற்சிகளும், கைதிகள் பரிமாற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
முன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் மோதல்
2022 பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீது திடீரென படையெடுத்தது. தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் உக்ரைன் எல்லைப் பகுதிகளை ரஷியப் படைகள் கைப்பற்றின.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் பதிலடி கொடுத்ததால், சில பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறின. இருப்பினும், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, மேலும் இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அமைதி முயற்சிகளும் டிரம்ப்பின் முன்மொழிவும்
இந்நிலையில் நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், "இனிமேலும் உயிர்கள் பலியாவதை நான் விரும்பவில்லை" என்றும் குறிப்பிட்டார்.
அவர் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்து, ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ரஷ்யா இந்தப் பரிந்துரைகளில் பல மாற்றங்களைச் செய்ய நிபந்தனை விதித்தது.
முதல் நேரடிப் பேச்சுவார்த்தையும் கைதிகள் பரிமாற்றமும்
போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக, கடந்த வாரம் துருக்கியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிகாரிகள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீடித்தது.
இருப்பினும், சுமார் ஆயிரம் கைதிகளை பரிமாற்றம் செய்ய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
உறுதிப்படுத்தப்பட்ட கைதிகள் விடுதலை முயற்சி
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்தும் தலா ஆயிரம் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத உக்ரைன் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இந்த நடவடிக்கை முழுமையாக முடிவடையவில்லை என்றும் அவர் கூறினார்.
டொனால்டு டிரம்ப் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு பெரிய கைதிகள் பரிமாற்றம் நடந்ததாக தெரிவித்த நிலையில், இந்த உக்ரைன் அதிகாரியின் கருத்து அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |