தடையற்ற விநியோகம்... உக்ரேனிய தானியம் தொடர்பில் 75 நாடுகள் அதிரடி நடவடிக்கை
ரஷ்ய ஊடுருவலை அடுத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் தானிய ஏற்றுமதி இனி தடையின்றி முன்னெடுக்க 75 நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாடு முன்னணியில்
உக்ரைன் போர் அமைதிப்பேச்சுவார்த்தையின் ஒருபகுதியாக தானிய விநியோகம் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே 75 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஒருங்கிணைந்து உக்ரேனிய வேளாண் பொருட்களின் தடையற்ற விநியோகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் தற்போது சிக்கலில் இருக்கும் உலகளாவிய உணவு பாதுகாப்பு திட்டம் பயன்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 75 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இணையமூடாக முன்னெடுக்கப்பட்ட கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடுதல் முயற்சிகளுக்கும் உறுதியளித்துள்ளனர். கோதுமை மற்றும் சோளம் உற்பத்தியில் உக்ரைன் நாடு முன்னணியில் உள்ளது.
ஆனால் ரஷ்ய ஊடுருவுலை அடுத்து உக்ரைன் தானிய ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், உலகமெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்துள்ளது.
6 மில்லியன் மெட்ரிக் டன்
மட்டுமின்றி, ரஷ்யாவின் தொடர் தாக்குதல் காரணமாக உக்ரைன் துறைமுகங்களும் கடுமையாக சேதமடைந்தன. இருப்பினும், தெற்கு ஒடேசா பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்கள் மூலம் மீட்டெடுக்கப்பட்ட ஏற்றுமதி நடவடிக்கைகளால் உணவு தானியங்களின் பற்றாக்குறை சிறிதளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதனிடையே, 2023/24 பருவத்தில் மட்டும் 69.86 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்கள், தாவர எண்ணெய்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களை ஏற்றுமதி செய்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷ்யா ஊடுருவலுக்கு முன்னர் கருங்கடல் வழியாக மாதம் 6 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |