உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட வெள்ளம்: குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏழு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 பேர் உயிரிழப்பு:
வட மாநிலங்களான உத்தரகாண்ட், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் பெய்த மழையால் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு கிடைத்த தகவலின்படி, லக்சரின் ஹபீப்பூர் குண்டி கிராமத்தில் சத்பால் (47) மற்றும் பாசேடி காதரில் அஜய் குமார் (27) ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ரூர்க்கியில், பெய்த கனமழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததில் ஏழு வயது அலியுசா உயிரிழந்தார்.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை (எஸ்டிஎம்டி) கூடுதல் செயலாளர் சவின் பன்சால் "கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் ஹரித்வாரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், 'மைக்ரோவேவ் சாட்டிலைட் டேட்டா' மூலம் அப்பகுதியை ஆய்வு செய்து வெள்ள வரைபடத்தை தயாரித்துள்ளது" என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், வெள்ள வரைபடம் ஹரித்வார் மாவட்ட நிர்வாகத்திற்குக் கிடைத்துள்ளது. இது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை சரியான நேரத்தில் திட்டமிடவும் செயல்படுத்தவும் உதவும் என்றார்.
வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்:
மேலும், மாவட்டத்தில் 511 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இக்கிராமங்களில் நிவாரணப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பன்சால் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட கிராமங்களான லக்சர், பக்வான்பூர், ஹரித்வார் மற்றும் ரூர்க்கி ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், குடிநீர் மற்றும் நிவாரணப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஹரித்வாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் ராணுவத்தின் குழுக்கள் பதற்றமான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |