பணத்தாள் அச்சடிப்பு - ஆசிய நாடுகள் இந்தியாவிற்கு பதிலாக சீனாவை தேர்வு செய்தது ஏன்?
ஆசிய நாடுகள் ஏன் தங்களது பணத்தாள் மற்றும் நாணயங்களை அச்சிட இந்தியாவிற்கு பதிலாக சீனாவை நாடியுள்ளது என்பதை பார்க்கலாம்.
பணத்தாள் அச்சடிப்பு
இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் அச்சடிப்படுகின்றன.

அதே போல், நாணயங்கள், ஹைதராபாத், கல்கத்தா மற்றும் நொய்டாவில் அரசாங்கத்தின் நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டின் பணத்தாள் மற்றும் நாணயங்களை அச்சிடுவதற்கு பிற நாடுகளை சார்ந்துள்ளன.
இந்தியாவிடமிருந்து சீனாவிற்கு சென்ற நேபாளம்
சமீபத்தில், நேபாள ராஸ்ட்ரா வங்கி(Nepal Rastra Bank), சுமார் 16.985 மில்லியன்டொலர் மதிப்பிலான 430 மில்லியன் ரூபாய் நோட்டுகளை வடிவமைத்து அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனமான CBPMCக்கு வழங்கியது.
ஆனால், நேபாளம் 1945 முதல் 1955 ஆம் ஆண்டு வரை தனது பண அச்சிடுதலுக்கு முழுமையாக இந்தியாவை சார்ந்திருந்தது.

அதன் பின்னர், நேபாளத்தின் புதிய நாணயத்தாள்கள், சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபாணி ஆகியவற்றை நேபாளத்தின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன.
இதன் காரணமாக நேபாள நாணயத்தை அச்சிட இந்தியா விரும்பவில்லை.
இருந்தாலும், 2015 ஆம் ஆண்டு வரை நேபாளத்தின் சில நாணயங்கள் இந்தியாவில் அச்சிடப்பட்டன.
2015 ஆம் ஆண்டு முதல் நேபாளம் அந்த ஒப்பந்தத்தை, சீன அரசு நிறுவனமான சீனா வங்கித்தாள் அச்சிடுதல் மற்றும் நாணயமாக்கல் கழகத்திற்கு (CBPMC) வழங்கியுள்ளது.
CBPMC
நேபாளம் மட்டுமல்லாது, வங்காளதேசம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பல்வேறு நாடுகளும் தங்களின் பணம் மற்றும் நாணய அச்சிடுதலுக்கு சீனாவையே சார்ந்துள்ளன.

சீனாவின் நாணய அச்சிடும் தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டதாகவும், சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும், சிறந்த அச்சுதரத்தையும் வழங்குவதே காரணமாக கருதப்படுகிறது.
வாட்டர்மார்க்ஸ், போலியை தடுக்கவும் செலவுகளைக் குறைக்கவும் கலர் டான்ஸ் ஹாலோகிராபிக் அம்சங்கள், பாதுகாப்பு நூல்கள் மற்றும் வண்ணத்தை மாற்றும் மை போன்றவற்றை CBPMC வழங்குகிறது.

1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட CBPMC, சுமார் 40,000 ஊழியர்களுடன் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளை வைத்துள்ளது.
2015 ஆம் ஆண்டில், நாணய அச்சிடுதல் துறையில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி தனியார் நிறுவனமான பிரித்தானியாவின் De La Rueவின் பணத்தாள் அச்சிடும் பிரிவை வாங்கியது.

1821 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட De La Rue, பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட 140 நாடுகளின் நாணயத்தை அச்சிட்டு வந்தது.
இந்த கையகப்படுத்தல் மூலம், CBPMC ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு அதன் சேவையை விரிவுபடுத்தியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |