உலகின் அதிக மக்கள் வாழும் குடியிருப்பு... வீட்டை விட்டு எங்குமே செல்லத் தேவையில்லை
உலகின் அதிக மக்கள் குடியிருக்கும் கட்டிடம், ரஷ்யாவில் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில், 3,708 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன.
உலகின் அதிக மக்கள் வாழும் குடியிருப்பு
ரஷ்யாவின் செயின்ட் பீற்றர்ஸ்பர்கின் அருகில் அமைந்துள்ள, ’Human Anthill’ என அழைக்கப்படும் இந்தக் கட்டிடத்தில் 20,000 பேர் வாழும் வசதி உள்ளது.
குடியிருப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுமே இரண்டு படுக்கையறை வசதி கொண்டவையாகும்.
இந்தக் கட்டிடத்திற்கு 35 வாசல்களும் , 25 தளங்களும் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும், நான்கு முதல் ஆறு குடியிருப்புகள் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு பகுதியிலும் வேகமாக பயணிக்கும் நான்கு லிஃப்ட்களும் உள்ளன.
வீட்டை விட்டு எங்குமே செல்லத் தேவையில்லை
விடயம் என்னவென்றால், இந்தக் கட்டிடத்தின் முதல் தளம் முழுவதுமே கடைகள், தொழில்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஒரு நகரம் போல அது காட்சியளிக்கிறது.
அங்கு ஏழு உணவகங்கள், மூன்று அழகு நிலையங்கள், ஒரு சிறார் பள்ளி, பல காஃபி ஷாப்கள் மற்றும் ஒரு தபால் நிலையமும் உள்ளது.
ஆக, உடற்பயிற்சிக் கூடம் முதலான அனைத்து வசதிகளும் கட்டிடத்திலேயே உள்ளன. அந்தக் கட்டிடத்தில் வாழும் ஒருவர், ஒருமுறை தான் ஆறு மாதங்களுக்கு அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே செல்வதற்கான அவசியமே ஏற்படவில்லை என்கிறார்.
இந்தக் கட்டிடத்தில் அமைந்துள்ள இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு குடியிருப்பின் விலை, சுமார் 76,000 பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |