ஜிம்மில் அலட்சியம்.. Treadmill-ல் ஓடும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
இந்தியா, டெல்லியில் இருக்கும் ஒரு ஜிம்மில் உள்ள டிரட்மில்லில் ஓடும் போது மின்சாரம் தாக்கி 24 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
வடக்கு டெல்லியின் ரோகினி செக்டார் 19ல் சக்ஷம் ப்ருதி (24) என்ற இளைஞர் வசித்து வந்தார். இவர் பிடெக் முடித்துவிட்டு குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் ரோகிணி செக்டர் 15ல் உள்ள ஜிம்ப்ளக்ஸ் என்ற ஃபிட்னஸ் ஜிம்மிற்கு செல்வது வழக்கம்.
அதே போல், நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவர் மயங்கி விழுந்துள்ளார். பின்பு அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஜிம் மேலாளர் கைது
இளைஞரின் மரணம் தொடர்பாக பி.எஸ்.ஏ மருத்துவமனையில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பொலிசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
ரோகிணி செக்டர் 15ல் உள்ள உடற்பயிற்சி மையத்தில் இருந்து இளைஞர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கொண்டு வரப்பட்டதாக தகவல் கிடைத்ததாக பொலிசார் கூறினர்.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் மின்சாரம் தாக்கியதே மரணம் எனவும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஜிம் மேலாளர் அனுபவ் துக்கலை பொலிசார் கைது செய்தனர். கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை மற்றும் இயந்திரங்கள் தொடர்பாக அலட்சியமாக நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |