நீண்ட தூரம் இலக்கை தாக்கும் ஏவுகணைகள்! பைடனுடன் ஜெலன்ஸ்கி பேசியது என்ன?
வாக்னர் படை ரஷ்யாவின் மாஸ்கோ நோக்கி விரைந்து கொண்டிருந்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், ரஷ்யா ஆதரவு கூலிப்படையான வாக்னர் படை ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியது.
இதற்கு காரணம் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ராணுவ தளபதிகளுக்கும், வாக்னர் படைத்தலைவருக்கும் இடையேயான மோதலே என கூறப்பட்டது.
ரஷ்யாவின் இரு முக்கிய நகரங்களை கைப்பற்றிய வாக்னர் படை, மாஸ்கோ நோக்கி முன்னேறி கொண்டிருந்ததாகவும், படையில் உள்ள 25,000 பேரும் சாகத்தயார் என வாக்னர் படைத்தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Photograph by Brendan Smialowski / AFP / Getty
இச்சூழலில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுடன், ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில், நான் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசினேன், அது நேர்மறையானதாக உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது.
ரஷ்யாவில் நடைபெறும் சூழல் குறித்து, உக்ரைன்- ரஷ்யா போர் குறித்தும் விவாதித்தோம்.
ரஷ்யாவுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் நீண்ட தூரம் இலக்கை சென்று தாக்கக்கூடிய ஆயுதங்கள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடந்ததாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |