முன்னாள் காதலன் தொடர்ச்சியான கொலை மிரட்டல்: பிரேசிலில் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்
பிரேசிலில் சிகையலங்கார கடை ஒன்றை புதிதாக தொடங்கி நடத்தி வரும் இளம்பெண் ஒருவர், மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் சுட்டுக் கொலை
பிரேசிலில் ஒரு குழந்தைக்கு தாயான நடாலியா சோசா என்ற 26 வயது இளம் பெண், ஸா பாலோ (Sao Paulo) என்ற நகரில் சிகையலங்கார கடை ஒன்றை புதிதாக தொடங்கி நடத்தி வருகிறார்.
Natalia Sousa- நடாலியா சோசா(Newsflash)
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடாலியா சோசா அவருடைய கடையில் வாடிக்கையாளரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்த போது, திடீரென கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடாலியாவை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
நடாலியா சோசா துப்பாக்கியால் தாக்கப்பட்டு சரிந்து விழுவதை பார்த்த மர்ம நபர், உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
முன்னாள் காதலன் மீது சந்தேகம்
நடாலியா துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்டு உயிரிழந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கொலையாளியின் அடையாளங்கள் சரியாக தெரியவராத நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடாலியாவின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்த தகவலில், நடாலியாவின் முன்னாள் காதலன் தொடர்ந்து அவளுக்கு கொலை மிரட்டல் கொடுத்து வந்ததாகவும், துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவேன் என்றும் அடிக்கடி மிரட்டி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
நடாலியாவின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையிலும் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.