கிறிஸ்துமஸ் தினத்தன்று 240 அடி பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்த பேருந்து: உறைய வைக்கும் புகைப்படங்கள்
ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் தினத்தன்று பேருந்து ஒன்று 240 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்த பேருந்து
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஸ்பெயினின் வடமேற்கு கலிசியா (Galicia) பகுதியில் உள்ள ஆற்று பாலம் ஒன்றை பேருந்து கடக்கும் போது தனது கட்டுப்பாட்டை இழந்து 240 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்துள்ளது.
இந்த கோர விபத்தானது சனிக்கிழமை இரவு வைகோ(Vigo) மற்றும் போர்ச்சுகல் எல்லைக்கு அருகில் நடைபெற்றுள்ளது, இதில் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கலீசியாவில் உள்ள மான்டெரோசோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கச் சென்றவர்களை பேருந்து ஏற்றிச் சென்றதாக பிராந்திய La Voz de Galicia செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
முதலில் பள்ளத்தாக்கில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், பேருந்தின் ஓட்டுநர் உட்பட மேலும் இருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவசர சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஸ்பெயின் சிவில் காவலர்களால் மேலும் இரண்டு உடல்கள் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம்
இந்த விபத்து தொடர்பாக Pontevedra சிவில் காவலர்களின் செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், செங்குத்தான சாய்வு கொண்ட இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் மது அருந்தவில்லை என்றும், இந்த கோர விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்று சிவில் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் இரவோடு இரவாக இடைநிறுத்தப்பட்டு இருந்தது, ஆனால் இன்று காலை மீண்டும் மீட்பு பணிகள் ஆரம்பமானது.