உள்நாட்டு போர்! ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் படை திரும்பியது ஏன்?
ரஷ்யா- உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியுள்ளது கூலிப்படையான வாக்னர்.
ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்ட படையினர் முக்கிய நகரை கைப்பற்றிவிட்டதாகவும், மாஸ்கோவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னை சந்திக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அணிவகுத்து செல்லப்போவதாகவும் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் மிரட்டல் விடுத்திருந்தார்.
மேலும், வாக்னர் படையில் உள்ள 25,000 பேரும் சாகத்தயாராக இருக்கிறோம் என அறிவித்துள்ளார்.
மாஸ்கோ நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது, இந்நிலையில் இது ஒரு துரோகம், முதுகில் குத்தும் செயல் என ரஷ்ய ஜனாதிபதி புடின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியது ஏன்?
உக்ரைனுக்கு எதிரான போரில் அதிக உயிரிழப்புகளுக்கும், ரஷ்ய ராணுவத்தின் பின்னடைவுக்கும் பாதுகாப்பு அமைச்சரே காரணம் என வாக்னர் படைத்தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், பாதுகாப்பு அமைச்சர் இரண்டாவது நாயகனாக உருவெடுக்க இந்த போர் தேவைப்பட்டதாக குறிப்பிடுகிறார் வாக்னர் படைத்தலைவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாக்னர் கூலிப்படையின் தளத்தை ரஷ்ய ராணுவம் தாக்கியதாக யெவ்ஜெனி பிரிகோஸின் குற்றம்சாட்டியதை ரஷ்யா மறுத்தது.
பாதுகாப்பு அமைச்சருக்கும், வாக்னர் படைத்தலைவருக்கும் இடையேயான கசப்பே இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே புடினின் உரைக்கு பதிலளித்துள்ள யெவ்ஜெனி பிரிகோஸின், தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், ரஷ்ய நிர்வாகத்தில் நிலவும் ஊழல், அதிகார பசிக்கு முடிவு கட்ட முடிவு செய்துள்ளதாகவும் நேரடியாக சவால் விடுக்கும் படி பதிலடி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்த உலகத்தின் கண்ணும் ரஷ்யாவின் பக்கம் திரும்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |