பள்ளிக்கு பொட்டு வைத்து சென்ற மாணவியை ஆசிரியர் திட்டியதால் நேர்ந்த சோகம்
ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்கு பொட்டு வைத்துச் சென்ற மாணவியை ஆசிரியர் திட்டியதால், மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை:
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், டெத்துல்மாரி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹனுமன்கர்ஹி காலனியில் 17 வயது மாணவியான உஷா குமாரி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவர், பள்ளிக்கு செல்லும் போது பொட்டு வைத்து சென்றுள்ளார். இதனால், மாணவியை ஆசிரியை அறைந்ததாகவும், திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவி வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், மாணவி கடிதம் எழுதிவிட்டு பள்ளி சீருடையின் பாக்கெட்டில் வைத்துள்ளது பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவியின் பெற்றோர் போராட்டம்:
தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோர், காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் பள்ளிக்கு வெளியே கலவரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவியின் சடலத்துடன் டெத்துல்மாரியில் இருந்து நயா மோர் பகுதி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய டெத்துல்மாரி பொலிசார் ஆஷிஷ் குமார் யாதவ், "இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக செயின்ட் சேவியர்ஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது நாங்கள் எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனூங்கோ கூறுகையில் “ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் தனது பள்ளியில் ஆசிரியரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம் மீட்கப்பட்டுள்ளது. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
झारखंड के धनबाद में स्कूल में बिंदी लगाकर जाने पर पिटाई किए जाने से आहत हो कर एक छात्रा के आत्महत्या किए जाने की सूचना मिली है।
— प्रियंक कानूनगो Priyank Kanoongo (@KanoongoPriyank) July 11, 2023
मामले का संज्ञान लिया जा रहा है, जाँच के लिए @NCPCR_ की टीम धनबाद जाएगी।
இதற்கிடையில், தன்பாத் குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் உத்தம் முகர்ஜி,"இந்த பிரச்சினை தீவிரமானது என்றும், பள்ளி சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைக்கப்படாததால் மாவட்டக் கல்வி அலுவலரிடம் விவாதித்தோம்" எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |