2000 கிலோ யுரேனியம், 47 அணு குண்டுகள்: வடகொரியா குறித்து பகீர்
வடகொரியா 2000 கிலோகிராம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.
அணு ஆயுத சோதனை
பல ஆண்டுகள் தடைகள் இருந்தபோதிலும், வடகொரியா தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இரண்டு டன் (2000 கிலோ கிராம்) அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்திருப்பதாக நம்புவதாக அண்டை நாடான தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான குறிப்பிடத்தக்க அளவு அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா நீண்டகாலமாக வைத்திருப்பதாக அறிவதாக அவர் கூறியுள்ளார்.
இரண்டு டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் சுமார் 47 அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் அவர் தென்கொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2000 கிலோகிராம்
ஒருங்கிணைப்பு அமைச்சர் சுங் டோங்-யங் (Chung Dong-young) கூறுகையில், "பியாங்யாங்கின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பு 90 சதவீதத்திற்கும் அதிகமான தூய்மையானது. 2000 கிலோகிராம் வரை இருப்பதாக உளவுத்துறை நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.
இந்த நேரத்தில் கூட வடகொரியாவின் யுரேனியம் மைய விலக்குகள் நான்கு இடங்களில் இயங்குகின்றன. ஒரு அணு குண்டை உருவாக்க ஐந்து முதல் ஆறு கிலோ புளூட்டோனியம் மட்டுமே போதுமானது. புளூட்டோனியம் உற்பத்திக்காக மட்டுமே ஒதுக்கக்கூடிய 2,000 கிலோ அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் மிகப்பெரிய எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களை உருவாக்க போதுமானது" என்றார்.
மேலும் அவர், வடகொரியாவின் அணுசக்தி வளர்ச்சியை நிறுத்துவது ஒரு அவசர விடயம் என்றும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |