சீனாவுக்கு செல்லும் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in கனடா

சீனாவில் திடீரென ஒரு புதுவித நிமோனியா காய்ச்சல் பரவியுள்ளதால் அங்கு செல்லும் கனேடியர்கள், விலங்குகளைத் தொடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

சென்ற வாரம் சீனாவிலுள்ள Wuhan நகரில் தொடங்கிய ஒரு வைரஸ் நோய், வேகமாக பரவி 59 பேருக்கு தொற்றிவிட்டது.

அவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களை பரிசோதித்ததில், இந்த நோயை உருவாக்கியுள்ள வைரஸ் ஒரு புது வைரஸ் என்றும், இதுவரை இப்படி ஒரு வைரஸைக் குறித்து அறிந்ததில்லை என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் ஒரு குறிப்பிட்ட சந்தையில் கடல் உணவுகள் விற்கும் வியாபாரிகள் ஆவார்கள்.

எனவே அந்த சந்தை மூடப்பட்டுள்ளது. ரொரன்றோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான Dr. Neil Rau கூறும்போது, இந்த மர்ம நோயைக் குறித்து கேள்விப்படும்போது, 2003இல் பரவிய சார்ஸ் நோய் குறித்த நினைவுதான் வருகிறது என்றார்.

சீனாவில் தோன்றிய சார்ஸ் நோய், உலகம் முழுவதும் பரவி 8000 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தியது.

கனடாவில் மட்டும் 44 பேர் அந்நோய்க்கு பலியானார்கள். ஆனால், சீனா அந்த விடயத்தைக் குறித்து வெளியில் சொல்லாமல் வைத்துக்கொண்டதோடு, மற்ற நாடுகளில் உள்ள நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு உதவும் வகையில் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவுமில்லை.

ஆனால், இம்முறை சீனா தகவல்களை பரிமாறிக்கொள்வதாக கனடா தெரிவித்துள்ளதோடு, உலக சுகாதார மையமும் இந்த நோய்த்தொற்றை கவனமாக கண்காணித்து வருகிறது.

ஆகவே, சீனாவுக்கு பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள், பண்ணைகள், இறைச்சி வெட்டுமிடங்கள் ஆகியவற்றை தவிர்ப்பதோடு, உயிருள்ள மற்றும் இறந்த விலங்குகளை தொடுவதை தவிர்க்குமாறும் கனடா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டோர் மற்றவர்களை தொடுவதை தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகுமாறும், குறைந்தது 20 நொடிகளாவது தங்கள் கைகளை நன்றாக நன்றாக கழுவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்