நாய்களுடன் சென்ற பெண்கள் மீது பாய்ந்த கரடி... உயிர் தப்பிய ஆச்சரியம்!

Report Print Balamanuvelan in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரின்ஸ் ஜார்ஜ் பகுதிக்கருகில் தங்கள் நாய்களுடன் சென்ற ஒரு பெண்மணி மற்றும் அவரது வயதுவந்த மகள் இருவர் மீதும் கரடி ஒன்று பாய்ந்துள்ளது.

நடந்தது என்னவென்றால், இந்த பெண்கள் இருவரும் தங்கள் நாய்களுடன் வாக்கிங் சென்றபோது, கரடியைக் கண்ட நாய்களில் ஒன்று குரைக்க, சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்த கரடி திடுக்கிட்டு அந்த நாயை நோக்கி ஓடிவந்துள்ளது.

அந்த நாயை கரடி அச்சுறுத்துவதைக் கண்டதும் மற்ற நாய் அதை நோக்கி பாய, அப்போதுதான் அங்கு இரண்டு பெண்கள் நிற்பதை கரடி கவனித்துள்ளது. உடனே அந்த கரடி அந்த பெண்மீது மோதி அவரைக் கீழே தள்ள, அவருக்கு உடலில் கீறல்கள் ஏற்பட்டுள்ளன.

ஒரு பெண்ணை கரடி தாக்குவதைக் கண்ட மற்ற பெண் குறுக்கிட, அவரது கையைக் கடித்துள்ளது அந்த கரடி.

பின்னர் பின்வாங்கிய அந்த கரடி, அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளது. அந்த பெண்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டனர்.

அந்த கரடி தங்களை கொல்லும் நோக்கில் தாக்கவில்லை என்றும், எச்சரிக்கும் விதமாகவே தாக்கியது என்றும் அந்த பெண்கள் கூறியதையடுத்து, அந்த கரடியை பிடிக்கும் அல்லது கொல்லும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று வன பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துவிட்டனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்