சொந்த மண்ணில் பாகிஸ்தானை பந்தாடிய இலங்கை: தொடரை கைப்பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி

Report Print Santhan in கிரிக்கெட்
953Shares
953Shares
lankasrimarket.com

துபாயில் நடைபெற்ற பகல்-இரவு போட்டியான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த கிரிக்கெட் அணியும் இதுவரை முன்வரவில்லை.

இதனால் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை தனது சொந்த மண்ணாக கருதி அங்கு போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

இந்நிலையில் யு.ஏ.இ. சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

அபுதாபியில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில், இரண்டாவது போட்டி கடந்த 6-ஆம் திகதி துபாயில் துவங்கியது.

பகல் இரவு போட்டியான இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி கருணாரத்னே, தினேஷ் சண்டிமால், டிக்வெல்லா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 482 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணியை, இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறடித்ததால்,பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன் பின் 220 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இலங்கை அணிக்கு 96 ஓட்டங்களுக்குள் சுருண்டதால், பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 317 ஓட்டங்களை நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு, துவக்க வீரர் சமி அஸ்லாம் 1 ஓட்டம் எடுத்த நிலையில் கேம்பேஜ் பந்து வீச்சில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து அசால் அலி(17), ஹரிஷ் சோகைல்(10), சான் மசூட்(21) மற்றும் பாபர் அசாம்(0) என வெளியேறிய பாகிஸ்தான் அணி இறுதியாக 248 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம் இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.

கடந்த 2010 முதல் யு.ஏ.இ-யை தனது சொந்த மண்ணாக கருதி வரும் பாகிஸ்தான் அணி, அங்கு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது இல்லை என்பதால் இந்த தொடரையும் கைப்பற்றி விடுவோம் என்ற திமிரில் இருந்தது.

தற்போது முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததோடு, டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்துள்ளது.

மேலும் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால், கடுமையான விமர்ச்சனங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இந்த தொடரை கைப்பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்