விஸ்வரூபமெடுத்த ஸ்டீத் ஸ்மித்...! கதிகலங்கிய இங்கிலாந்து; இமாலய இலக்கு நிர்ணயம்

Report Print Kabilan in கிரிக்கெட்

பர்மிங்காம் டெஸ்டின் 2வது இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசியதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களும் குவித்தனர். அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ஸ்மித் 46 ஓட்டங்களுடனும், ஹெட் 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 4ஆம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட் 51 ஓட்டங்களில், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மேத்யூ வேட் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மறுமுனையில் இங்கிலாந்து வீரர்களுக்கு தண்ணி காட்டிய ஸ்மித், இரண்டாவது இன்னிங்சிலும் சதம் விளாசினார். இது அவருக்கு 25வது டெஸ்ட் சதம் ஆகும். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

AFP

இந்த கூட்டணியை கிறிஸ் வோக்ஸ் பிரித்தார். அணியின் ஸ்கோர் 331 ஆக உயர்ந்தபோது, ஸ்டீவ் ஸ்மித் 142 (207) ஓட்டங்களில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அணித்தலைவர் டிம் பெய்ன் களமிறங்கினார். இந்த கூட்டணி அதிரடியில் மிரட்டியது.

AFP

தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய மேத்யூ வேட் சதமடித்தார். அவர் 143 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து டிம் பெய்னும் (34) ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 409 ஓட்டங்களாக இருந்தது. இந்நிலையில், பாட்டின்சன்-கம்மின்ஸ் ஜோடி கைகோர்த்தது.

இருவரும் அபாரமாக விளையாடி 78 ஓட்டங்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 487 ஆக இருந்தபோது டிக்ளேர் செய்யப்பட்டது. பாட்டின்சன் 47 ஓட்டங்களுடனும், கம்மின்ஸ் 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். அவுஸ்திரேலியா டிக்ளேர் கொடுத்ததன் மூலம் 398 ஓட்டங்கள் இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்கள் எடுத்தது. இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 385 ஓட்டங்கள் தேவை. எனவே, இந்தப்போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற அல்லது டிராவில் முடிய அதிக வாய்ப்புகள் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்