உணவு தேடிச் சென்ற ஈரான் அகதிகள்: திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நேற்று காலை வனப்பகுதியில் கூடாரங்களை அமைத்திருந்த அகதிகள், உணவு தேடிச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, பொலிசார் அவர்களது கூடாரங்களை துவம்சம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இந்த குளிர்காலத்தில், நூற்றுக்கணக்கான ஈரான் அகதிகளின் ஒரே உறைவிடமான கூடாரங்களை அவர்கள் நாசம் செய்ததோடு, அதை படம் பிடிக்கச் சென்ற நிருபர்களின் கெமராக்களும் பிடுங்கப்பட்டு உடைக்கப்பட்டன.

ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஈரானிய அகதிகள் பிரான்சின் Calais துறைமுகத்தை பயன்படுத்துகின்றனர்.

இதனால் சமீபத்தில் பிரான்சும் பிரித்தானியாவும் இணைந்து தங்கள் கடல் எல்லைப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன.

கடந்த இரண்டு மாதங்களில் ஏராளமான அகதிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில், சுமார் 300 ஈரான் அகதிகள் கடல் வழியாக இங்கிலாந்தை அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய உள்துறைச் செயலர் Sajid Javid, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சட்டவிரோதமாக 539 அகதிகள் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள். அவர்களில் 230 பேர் டிசம்பரில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளார்கள்.

வடக்கு பிரான்சில் உள்ள வனப்பகுதியில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ள அகதிகள், ஒவ்வொரு நாள் காலையிலும் தங்கள் கூடாரங்களை விட்டு விட்டு, மனிதநேய அமைப்புகள் வழங்கும் உணவு மற்றும் உடையை சேகரிப்பதற்காக கடந்து செல்கிறார்கள்.

அவர்கள் கடந்து செல்லும்போதெல்லாம், திரும்பி வரும்போது தங்கள் கூடாரங்கள் என்ன ஆகுமோ என்ற அச்சத்திலேயே செல்கிறார்கள்.

நேற்றும் அப்படித்தான் நடந்தது, சில ஈரானிய அகதிகள் உணவு தேடிச் செல்ல, சிலர் தங்கள் கூடாரங்களில் இருந்தார்கள்.

அப்போது அங்கு வந்த பொலிசார் அவர்கள் இருந்த கூடாரங்களை துவம்சம் செய்தனர்.

குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், கூடாரங்களை மட்டுமே நம்பி இருக்கும் அந்த அகதிகளில் வாழ்வையும், தன்மானத்தையும் காக்க இரு நாடுகளும் பெரிதாக எதுவும் செய்ய முன்வரவில்லை.

எப்போதும் நாங்கள் எங்கள் கால்களில் பூட்ஸ் அணிந்து கொண்டேதான் தூங்குகிறோம் என்று கூறும் இந்த அகதிகள், நாங்கள் ஆழ்ந்து உறங்குவதே இல்லை, எப்போது பொலிசார் வருவார்கள் என்ற அச்சத்தில் பாதி திறந்த கண்களுடனேயே தூங்குகிறோம் என்கிறார்கள்.

ஈரான் அகதிகளைப் பொருத்தவரை பிரித்தானியாவை அடைய எளிய வழி பிரான்ஸ்தான், அவர்கள் ஒன்றில் கடலைக் கடந்து அல்லது ட்ரக் ஒன்றில் தொற்றிக் கொண்டு எப்படியாவது பிரித்தானியாவை அடைய முடியும் என்று நம்புகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்