நான் வைரஸ் இல்லை: இன வெறித்தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ள பிரான்ஸ் நாட்டு ஆசியர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்று ஆசிய நாட்டவர்களை அவமதிக்கும் வகையில் இன வெறி ரீதியில் ஒரு செய்தியை வெளியிட்டதையடுத்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்சில் வாழும் ஆசியர்கள் ’ நான் வைரஸ் இல்லை’ என்னும் ஹேஷ்டேகை பயன்படுத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, அது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவினாலும் பரவியது, உலகெங்கும் சீனர்கள் மட்டுமின்றி, சீனர்கள் போல் காட்சியளிக்கும் எல்லா ஆசியர்கள் மீதும் இனவெறித்தாக்குதல் தொடங்கி விட்டது.

பிரான்சில் ஒரு பத்திரிகை ’மஞ்சள் எச்சரிக்கை’ என்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது.

அத்துடன் மாஸ்க் அணிந்த ஒரு ஆசியப்பெண்ணின் படமும் அதன் கீழ் பிரசுரிக்கப்பட்டிருந்தது. மஞ்சள் என்பது குறிப்பாக கிழக்காசியர்களைக் குறிக்கும் சொல்லாகும்.

அதாவது, ஆசியர்களை அவமதிக்கும் வகையில் அந்த தலைப்பு கொடுக்கப்பட்டிருந்ததாக மக்கள் கருதியதால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

தங்கள் புகைப்படங்களுடன் ‘நான் வைரஸ் இல்லை’ என்ற செய்தியை பரப்ப ஆரம்பித்தனர் ஆசிய நாட்டவர்கள். ஒரு ஆசிய நாட்டு இளம்பெண், தான் பேருந்தில் செல்லும்போது, ஒரு கூட்டம் இளம்பெண்கள் அவர் காது கேட்க கிண்டல் செய்தார்களாம்.

ஒரு பெண், கொரோனா வைரஸ் நோயாளிகளை என்னவென்று அழைப்பார்கள் என்று கேட்க, மற்றொரு பெண், சீனர்கள், அப்படித்தானே என்று கேட்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கு பதிலளிக்கும் வகையில் பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ள 'Huyen Tran' என்னும் அந்த இளம்பெண், தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு, கடைசியாக, நான் சீனப்பெண் இல்லை, ஆனால் அவர்கள் கூறிய விடயம் என்னை சோகத்தில் அழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளதோடு, அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டியும் உள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் தங்களுடன் ரயிலில் ஒரு சீனப்பெண் பயணிப்பதால், தங்கள் மூக்குகளை மூடியபடி சில பிரான்ஸ் நாட்டவர்கள் பயணிப்பதைக் காணமுடிகிறது. 'butchinelle' என்ற இளம்பெண், தான் நடந்து வரும்போது தன் எதிரே வந்த இருவர், கவனம் நம்மை நோக்கி ஒரு சீனப்பெண் வருகிறாள் என்று கூறினார்களாம்.

முதலில் நான் சீனப்பெண் அல்ல என்று தன் கோபத்தை வெளிப்படுத்தும் அந்த பெண், எல்லா ஆசியர்களும் சீனர்களும் இல்லை, எல்லா சீனர்களுக்கும் வைரஸ் தொற்றும் இல்லை, எல்லோரும் இருமுகிறார்கள், நாங்கள் இருமும்போது மட்டும், எங்களிடம் நீங்கள் ஆபத்தானவர்களா என்று கேட்பதை நிறுத்துங்கள் என்று கொந்தளித்துள்ளார்.

'ChengwangL' என்ற பெண், நான் சீனப்பெண் தான், ஆனால் நான் வைரஸ் இல்லை, எல்லோரும் வைரஸ் குறித்து பயந்திருப்பது எனக்கும் தெரியும், அதற்காக இப்படி எங்களை அவமதிப்பதை நிறுத்துங்கள் என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers