இந்தியாவை உலுக்கிய முக்கிய ஊழல்கள்

Report Print Gokulan Gokulan in இந்தியா

இந்திய அரசியல் களத்தில் கோலோச்சிய முக்கிய தலைவர்களையும் அவர்களின் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளையும் அடிப்படையாகக்கொண்டே இந்திய அரசியல் களம் சுழன்று வந்துள்ளது வரலாறு.

அப்படிபட்ட இந்திய அரசியல் களத்தின் முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மீதான போஃபர்ஸ் ஊழல்:

1986-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டது.

இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக ஸ்வீடனின் போஃபர்ஸ் நிறுவனத்துடன் 1,437 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக இந்திய அரசு லஞ்சம் பெற்றிருப்பதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டையடுத்து 1999-ஆம் ஆண்டு சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குவாத்ரோச்சி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் ஊழல்:

2010-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட காங்கிரஸ் எம்.பி சுரேஷ் கல்மாடி மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டில் மைதானங்கள் கட்டுதல், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் போன்றவற்றில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது.

டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் வீட்டுக்கு டிவி, சேர் உட்பட பல பொருட்களை கொண்டு சென்றதாக கூறப்பட்ட நிலையில் உலக அளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியதாக பேசப்பட்டது. ஒருங்கிணைப்பாளார் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டார்.

பீகார் மாட்டுத்தீவன ஊழல்:

1990-ஆம் ஆண்டு பீகாரின் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மீது நேரடியாக சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டில் மாட்டுத்தீவனம் வாங்குவதில் 950 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

லாலு ஆட்சியில் இருந்த போது அவரது இல்லத்தில் சி.பி.ஐ சோதனை நடத்தப்பட்ட நிலையில் 1997-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கினார் லாலு பிரசாத் யாதவ்.

2G அலைக்கற்றை வழக்கு:

2007-ம் ஆண்டு 2G அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு என புகார் எழுந்தது. இந்திய அரசுக்கு ரூ1.76 கோடி இழப்பு என தகவல் வெளியான நிலையில், தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா எம்.பி மற்றும் மு.க.கனிமொழி எம்.பி ஆகியோர் இந்த வழக்கில் கைதாகினர். 2ஜி வழக்கு விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது. 8 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல்:

2013ம் ஆண்டு மேற்குவங்கம், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் திவால் ஆனதாக அறிவித்தது. சாரதா நிதி நிறுவனத்தில் 17 லட்சம் வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகையின் மதிப்பு 2,500 கோடி ரூபாய் என கூறப்பட்டது.

இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் பணத்தை இழந்த அப்பாவி மக்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால், எம்பி, எம்.எல்-ஏக்கள் கைதானபோது முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் போர்கொடி உயர்த்தின. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முக்குல் ராய், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி ஊழல்:

இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் கீழ் நிலக்கரித்துறை அமைச்சகம் செயல்பட்ட காலத்தில் நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், ஊழலில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் எம்.பி நவின் ஜிண்டால் கைதானார். 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

வியாபம் ஊழல்:

மத்தியப்பிரதேசத்தின் தொழில் முறை தேர்வுகளுக்காக அமைக்கப்பட்ட வாரியம் ’வியாபம்’. வியாபம் மூலம் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வின் மதிப்பெண்கள் அதிகரிக்கப்பட்டு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தகுதியற்ற மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்காக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கோடி கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பெயரும் அடிபட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2,000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்ட நிலையில் 49 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்:

கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித்தர உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் பாஜகவின் சுரேஷ் பிரபுவின் பெயரிலும் ஒரு வீடு இருந்ததாக தகவல் வெளியானது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரது பெயரும் இந்த ஊழல் வழக்கில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு:

1991 -1996 வரை முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று, அவர் தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு மீறி சொத்து குவிப்பு, ஸ்பிக் பங்கு விற்பனை, நிலக்கரி ஊழல், டான்ஸி நிலம், கலர் டிவி ஊழல், சுடுகாட்டுக்கூரை ஊழல் என தொடர்ந்து பல ஊழல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தன.

இந்திய அளவில் பெரும் விவாத பொருளாக மாறிய இந்த வழக்கில், ஊழல் நடந்திருப்பதாக ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்குகளால் 2 முறை முதல்வர் பதவியை இழந்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers