ரத யாத்திரைக்கு எதிராக திமுக சாலை மறியல்: ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு

Report Print Kabilan in இந்தியா

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பிய திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

விஎச்பி ரத யாத்திரைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

ரத யாத்திரை குறித்து டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என விமர்சித்தார்.

இதற்கு விளக்கமளித்த எடப்பாடி பழனிச்சாமி, ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசுவது சரியல்ல என்றும் 5 மாநிலங்களில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் யாத்திரை வந்துள்ளது.

யாத்திரையால் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதை ஏற்க மறுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அமளி துமளியில் ஈடுபட்டனர், இருக்கையில் அமர கோரி சபாநாயகர் வலியுறுத்தியும் அவர்கள் அமளியில் ஈடுபடவே கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபைக்கு வெளியே சாலை மறியல்

மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளியில் வந்த திமுக உறுப்பினர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய், தடை செய், யாத்திரையை தடை செய் என மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

இதனால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்தனர்.

ரத யாத்திரை எதிர்ப்பு குறித்து ஸ்டாலினின் விளக்கம்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், கைது செய்யப்பட்ட பின்னர் ரத யாத்திரை எதிர்ப்பு குறித்து கூறுகையில்,

‘மற்ற மாநிலங்களில் எல்லாம் பெரியார் பிறக்கவில்லை. தமிழகத்தில் தான் பெரியார் பிறந்தார். அந்த உணர்வு எங்களுக்கு உள்ளது. தமிழகத்தில் பிறந்த அண்ணா எங்களை உருவாக்கி இருக்கிறார்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதையும் இந்த ஆட்சி வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. பெரியார் குறித்து ஹெச்.ராஜா பேசியபோது, இந்த அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்