பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 கோடி அபராதத் தொகையை எப்படி கட்டுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விடுதலையைப் பற்றி பல தகவல்கள் வெளியானாலும், ஜனவரி 27-ஆம் திகதி சசிகலா விடுதலையாவார் என கர்நாடக சிறைத்துறை ஆர்டிஐ தெரிவித்துள்ளது.
ஆனால், அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை கட்டத்தவறினால், மேலும் ஒரு ஆண்டு காலம் தண்டனை நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொது முடக்க காலத்தில் வெளியே தலைகாட்டாமல் இருந்த டிடிவி தினகரன் கடந்த வாரம் தனி விமானத்தில் சத்தமில்லாமல் டெல்லி சென்று திரும்பினார்.
இதனால் அவர் டெல்லி சென்ற அங்கு யாரை சந்தித்தார் என்ற கேள்வி எழும்பிய போது, பாஜகவின் முக்கிய புள்ளிகளை சந்தித்துள்ளதாகவும், சசிகலாவின் விடுதலை குறித்து தான் என்றும் தகவல் வெளியானது.
எனவே, சசிகலா விடுதலையை மையமாகக் கொண்டு பாஜக அரசியல் செய்கிறதா என்ற பேச்சும் அடிபடுகிறது.
சசிகலாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவரை விரைவாக விடுதலை செய்ய தினகரன் தரப்பு ஒருபக்கம் முயற்சித்து வருகிறது.
மேலும், பத்து கோடி அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு ஆண்டு தண்டனைக்காலம் நீட்டிக்கப்படும் நிலையில் அந்த தொகையை எப்படி செலுத்துவது என்று அவரது தரப்பு ஆலோசித்து வருகிறது. செலுத்தக்கூடிய பத்து கோடிக்கும் வருமான கணக்கை நீதிமன்றத்தில் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னால் வருமான வரித்துறையினர் சசிகலாவின் சொத்துக்களை முடக்கம் செய்த நிலையில் அமமுகவினரிடம் வசூல் செய்து செலுத்த திட்டமிடப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர்.
அதே சமயம் சசிகலா மற்றொரு திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. திவாகரன் மகன் ஜெய் ஆனந்திடம் சசிகலா ஒரு யோசனை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன்.
அதாவது சசிகலாவின் கணவர் நடராஜன் தனது தந்தை மருதப்பா பெயரில் நடத்தி வந்த அறக்கட்டளை மூலம் செலுத்தலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.