சசிகலாவுக்காக காத்திருக்கும் இளவரசி-சுதாரகரன்! இன்னும் 2 வாரத்தில் விடுதலை: வெளியான முழு தகவல்

Report Print Santhan in இந்தியா
3511Shares

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா வரும் 27-ஆம் திகதி விடுதலையாகவுள்ளதாகவுள்ளதால், அவரை சிறப்பான முறையில் வரவேற்க அ.ம.மு.க-வினர் திட்டம் தீட்டி வருகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் உச்சநீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

இதையடுத்து இவர்கள் 3 பேரும், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சசிகலா மற்றும் இளவரசி இருவரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினர்.

அதன் பின், சசிகலா தனக்கு சிறை விதிமுறையின்படி சலுகை காட்டி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத்துறையில் மனு அளித்தார்.

ஆனால், அந்த மனு பரிசீலனையில் உள்ள நிலையில், சசிகலா வருகிற 27-ஆம் திகதி விடுதலையாக உள்ளார்.

இதற்கிடையில், சுதாகரன் பெங்களூரு நீதிமன்றத்தில், நான் இவ்வழக்கில் 1996-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை 92 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளேன். எனவே எனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையில் இந்த 92 நாட்களை கழித்து, முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதை கடந்த 17-ஆம் திகதி ஏற்ற நீதிமன்றம் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதேபோல இளவரசியும் இவ்வழக்கில் 50-க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் இருந்துள்ளதால் முன்கூட்டியே வெளியே வருவார் என கூறப்பட்டது.

சுதாகரன் தன் வழக்கறிஞர்களிடம், நான் சசிகலா, இளவரசிக்கு முன்னதாக சிறையில் இருந்து வெளியே வரவிரும்பவில்லை. நானும் இளவரசியும் வெளியே வந்துவிட்டால் சசிகலா தனிமையில் வாட வேண்டிய நிலை ஏற்படும்.

3 பேரும் ஒன்றாகவே வெளியே வருகிறோம். அதுவரை அபராதத்தை செலுத்த வேண்டாம். நான் வெளியே வருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இதேபோல இளவரசியும் சசிகலாவுக்கு முன்னதாக வெளியே வருவதை விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக வழக்கறிஞர்கள் சுதாகரன் நீதிமன்றத்தில் அபராதத் தொகை கட்டுவதற்கான நடவடிக்கையும், இளவரசி வெளியே வருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சசிகலாவுக்காக தண்டனைக்காலம் முடிந்தும் சுதாகரனும், இளவரசியும் காத்திருப்பதாக அவர்களுடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வருகிற 27-ஆம் திகதி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட 3 பேரும் விடுதலையாக உள்ளனர். 27-ஆம் திகதி இவர்களை எந்த நேரத்தில் விடுதலை செய்வது என்பது குறித்து பொலிசார் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது அவரது பாதுகாப்பு கருதி கர்நாடக மாநில எல்லைக்குள் தமிழகத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படாது என்பதும் தெரியவந்துள்ளது.

சிறையில் இருந்து வெளியே வரும் 3 பேரையும் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான ஓசூர் அத்திபள்ளி வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல கர்நாடக அரசு மற்றும் பொலிசார் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விடுதலையாகி வரும் சசிகலாவை வரவேற்பது தொடர்பாக சேலம் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.சி.வெங்கடாசலம் கூறுகையில், வரும் 27-ஆம் திகதி சசிகலா விடுதலையாகிறார். நாங்கள் அவரை வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

அவர் விடுதலையாகி வரும்போது சசிகலாவை சிறப்பான முறையில் வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அணிவகுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

அவரை வரவேற்க சேலம் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை இருக்கும் பகுதிக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்