சுற்றுலா பயணிகள் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தஜிகிஸ்தான் நாட்டில் பயணம் செய்த வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் மீது வாகனத்தால் மோதிவிட்டு பின்னர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

தஜிகிஸ்தான் நாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் சுற்றுலா பயணிகளாக சென்று கொண்டிருந்தனர்.

இதில் பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது.

தலைநகர் துஷான்பேயின் தென்கிழக்கே சைக்கிளில் சென்ற அவர்கள் மீது அந்த பகுதி வழியாக வந்த கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது.

இதில் நான்கு பேர் தூக்கி வீசப்பட்டனர். மேலும், அவர்கள் மீது துப்பாகியால் தாக்குதலும் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த கொலைவெறி தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த இருவரும், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்.

பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த தாக்குதலை முன்னெடுத்தது தங்கள் அமைப்பை சேர்ந்த போராளிகள் என ஐ.எஸ் இயக்கத்தின் சார்பு பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் இதுவரை தஜிகிஸ்தானில் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இல்லை எனவும் தீவிர விசாரணைக்கு பின்னரே ஐ.எஸ் இயக்கத்தின் தொடர்பு குறித்து உறுதி செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த கொடூரமான தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் தஜிகிஸ்தான் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers