கோஸ்டா ரிக்காவில் கொல்லப்பட்ட அமெரிக்க அழகியின் கொலையின் பின்னணியில் பாலியல் நோக்கம் இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மியாமியைச் சேர்ந்த Carla Stefaniak (36), கோஸ்டா ரிக்காவுக்கு தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக சென்ற இடத்தில் திடீரென மாயமானார்.
பின்னர் மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, Stefaniak தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறத்தில் அவரது உடல் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றப்பட்டு பாதி புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், Stefaniakஇன் உடல் அரை நிர்வாணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடைசியாக Stefaniak தனது தோழி ஒருவருக்கு போன் செய்யும்போது, மோசமான புயல் வீசுவதால் Martinezஐ அழைத்து தண்ணீர் வாங்கி வரச் சொல்லப்போவதாக கூறியிருக்கிறார்.
அதுதான் அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள் என்பது தெரிய வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் பொலிசார் Stefaniak தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த Bismark Espinosa Martinez (32) என்பவரைக் கைது செய்தனர்.
விசாரணையின்போது Martinez முன்னுக்குப்பின் முரணாக உளறியதையடுத்து, தொடர்ந்து அவரை விசாரித்து வரும் பொலிசார், தற்போது Stefaniak பாலியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
Stefaniak காணாமல் போனது தொடர்பாக விசாரிக்கும்போது, Martinez அவரது குடும்பத்தாரிடம், Stefaniak ஒரு காரில் ஏறி சென்றதைக் கண்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.