வெயிலிலிருந்து காக்க உதவும் சன் ஸ்கிரீன் புற்றுநோயை உண்டாக்குகிறதா?

Report Print Balamanuvelan in விஞ்ஞானம்

சன் ஸ்கிரீனில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மார்பு திசுக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்பக அகற்று சிகிச்சை மேற்கொள்ளும் 40 மார்பக புற்று நோய் நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட திசு மாதிரிகள் சோதிக்கப்பட்டபோது சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களிலிருந்து காப்பதற்காக தோலின்மீது பூசப்படும் சன்ஸ்கிரீனில் உள்ள வேதிப்பொருட்கள் அந்த திசுக்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டரைச் சேர்ந்த மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் Lester Barr மற்றும் புற்றுநோயியல் பேராசிரியர் Philippa Darbre இருவரும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

தோலின்மீது இருந்து தோலைக் காக்கவேண்டிய இந்த வேதிப்பொருட்கள் உடலுக்குள் ஆழமாக புகுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

மார்பு திசுக்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வேதிப்பொருட்கள் நன்மை செய்கின்றனவா, தீமை செய்கின்றனவா அல்லது எந்த மாற்றமும் செய்யாமல் சும்மா இருக்கின்றனவா என்பது குறித்து எதுவும்தெரியவில்லை என்று Lester Barr கூறியுள்ளார்.

இந்த பொருட்கள் எதுவும் புற்றுநோய் உருவாக்கக்கூடியவை அல்ல. என்றாலும் ஆய்வகத்தில் அவற்றை சோதனை செய்தபோது அவை ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனைப்போல் செயல்படும் தன்மை உடையவையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவை மார்பு திசுக்களின்மீது ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா என்பதை அறிய வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

70 சதவிகித மார்பக புற்றுநோய்கள் ஈஸ்ட்ரோஜனால் தூண்டப்பட்டு உருவாகின்றன.

அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனுக்கு உட்படுதல் மார்பக புற்றுநோயை உண்டாக்கக் கூடிய அபாயக் காரணியாகும்.

இந்த வேதிப் பொருட்கள், இந்த அபாயத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவையாகும்.

இதனால்தான் இவ்வளவு வேதிப்பொருட்கள் மார்பு திசுவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகியுள்ளது என்கிறார் பேராசிரியர் Philippa. இதனால் சன்ஸ்கிரீனே உபயோகிக்கக்கூடாது என்று தங்கள் கூறவில்லை என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் இதை ஒரு விழிப்புணர்வுக்காகவே தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்