ஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 176 குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை இழந்திருப்பதாக கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 258 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 500க்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

7 பயங்கரவாதிகள் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் ரோம் நகரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், ஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் தங்களுடைய பெற்றோரை இழந்திருப்பதாக கூறியுள்ளார்.

அந்த குழந்தைகளில் பலரும் தங்களுடைய பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் அல்லது இருவரையும் இழந்திருக்கின்றனர்.

இந்த தாக்குதலில் இருந்து மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வேலைகளில் தேவாலயங்கள் ஈடுபட்டு வருகின்றன. குண்டுவெடிப்பில் சேதமடைந்த தேவாலயங்களை புதுப்பிப்பதில் தேவாலயம் கவனம் செலுத்தாது, ஏனெனில் அரசாங்கம் அந்த பணியை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பதையும், படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவாலயம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து விளக்கியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்