சுவிட்சர்லாந்தில் கல்வி பயில விரும்பும் இலங்கை மற்றும் இந்திய நாட்டவர்களுக்கு பயனுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இலங்கை மற்றும் இந்தியா போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று அங்கேயே வேலையை பெற்றுக்கொள்வது சாத்தியமா என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களான சுவிஸ் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு வேலை உரிமத்திற்காக சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தும் முறைமையைக் கைவிடக்கோரி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட சுவிஸ் நாடாளுமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.

வேறு நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு கல்வியை மட்டும் அளித்துவிட்டு, அவர்களுக்கு வேலையில்லாத ஒரு சூழலை உருவாக்குவதை தவிர்க்கும் நல்ல எண்ணத்தின் பேரில் அந்த வாக்கெடுப்புக்கு நாடாளுமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.

தற்போதைய விவரப்படி சுவிஸ் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் மட்டுமே சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து வாழ்கிறார்கள்.

மற்றவர்களின் நிலை?

இந்தியாவைச் சேர்ந்த ஹரிஷ் குமார் ரவி தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை விவரிக்கிறார்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் மூலக்கூறு அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஹரிஷ், தான் எப்படி மனம் நொந்து சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறும் நிலையை அடைந்தேன் என்பதை தன்னை போன்ற மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியாக கூறுகிறார்.

முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்த ஹரிஷ், வேலை தேடி விண்ணப்பிக்க ஆரம்பித்தபோதுதான் கன்னத்தில் அறைந்தாற்போல் ஒரு உண்மை உறைத்தது.

அது ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் வேலை கிடைப்பது கடினம் என்பதுதான்.

வேலை தேடுவதில் காலம் கடந்து செல்ல, விசா முடியும் தருவாயில் மீண்டும் ஆறு மாதம் விசா நீட்டிப்புக் கோரி விண்ணப்பித்திருக்கிறார் ஹரிஷ்.

அப்போது அவரது விசா B (resident) உரிமத்திலிருந்து L (short-term) உரிமமாக மாற்றப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு அவர் வேலை தேடிச் சென்ற இடங்களிலெல்லாம் அவரது தற்காலிக உரிமம் காரணமாக வேலை மறுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வழங்குவோர் அவருக்கு B உரிமம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க, அவருக்கு வேலை வாய்ப்பு சிக்கலான ஒன்றாகிவிட்டிருக்கிறது.

பல பகீரத முயற்சிகளுக்குப்பின்னும் வேலை எட்டாக்கனியாகவே சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறியிருக்கிறார்.

தற்போது மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தான் கற்ற கல்விக்கு சம்பந்தமில்லாத ஒரு வேலையை செய்து வரும் ஹரிஷ், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு பிரிவுக்கெதிரான மசோதாவை (quota system for non-EU students) உடனடியாக சட்டமாக்க வேண்டும் என்கிறார்.

அப்படிச் செய்வது ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மாணவர்கள் சுவிட்சர்லாந்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதை எளிதாக்கும் என்கிறார் ஹரிஷ்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மாணவர்கள், உள்ளூர் மொழிகளை (ஜேர்மன், பிரெஞ்சு) கற்றுக்கொள்வது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers