அவன் தீவிரவாதியாக மாறுவான் என்று அப்போதே தெரியும்: இலங்கை தற்கொலை வெடிகுண்டுதாரி குறித்து பிரித்தானிய பேராசிரியர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இலங்கையில் ஈஸ்டர் தின தற்கொலை வெடிகுண்டுதாரி குறித்து முன்னரே அச்சத்துடன் கணித்திருந்ததாக பிரித்தானிய பேராசிரியர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் பல்கலைக்கழக துணை வேந்தரான ஜூலியஸ் வீன்பெர்க் என்பவரே தமது முன்னாள் மாணவர் தொடர்பில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேச்சுரிமை என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தாக்கங்கள் வளர்க்கப்படுவதாக கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணாக்கர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் ஊட்டிவளர்க்கப்படும் வகையில் பல சர்ச்சைக்குரிய பேச்சாளர்களால் கருத்தரங்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அந்த குற்றச்சாட்டில் டேவிட் கேமரூன் அழுத்தமாக பதிவு செய்திருந்தார்.

ஆனால் பேராசிரியர் வீன்பெர்க், பேச்சுரிமையை தாம் ஒருபோதும் மறுக்கப்போவதில்லை எனவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களும் பல்கலைக்கழக மாணாக்கர்கள் முன்னிலையில் பகிரப்படவேண்டும் எனவும் வாதிட்டார்.

இந்த நிலையில் கொழும்பு ஹொட்டல் ஒன்றில் தற்கொலை வெடிகுண்டுதாரியாக செயல்பட்டது கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஜமீல் முகம்மது(36) என்ற தகவல் வெளியானதும்,

அது தொடர்பில் பேராசிரியர் வீன்பெர்க் வெளியிட்ட கருத்து தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜமீல் முகம்மது இலங்கையில் வான்வெளி பொறியியல் பட்டம் பயின்றவர். அதன் ஒருபகுதியாக மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டு கல்வியை கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முடிக்க வேண்டும்.

ஜமீல் முகம்மது பிரித்தானியாவுக்கு முதன்முறையாக வரும்போது அவருக்கு 23 வயது. கல்வியை முடித்துக்கொண்டு 2007 செப்டம்பர் மாதம் இலங்கை திரும்பியுள்ளார்.

கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஜமீல் முகம்மது படித்துக்கொண்டிருக்கும்போது Shakeel Begg என்ற இஸ்லாமிய குரு ஒருவர் கருத்தரங்கம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் அவர், ஜிகாதியாக மாறப்போகுறீர்களா? பாலஸ்தீனத்திற்கு செல்லுங்கள், போராடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கருத்தரங்கில் ஜமீல் முகம்மது கலந்து கொண்டாரா என்பது தெரியாது எனக் கூறும் வீன்பெர்க், ஆனால் அவரது நடவடிக்கைகளில் இருந்து, ஜமீல் ஒருநாள் தீவிரவாதியாக மாற வாய்ப்புள்ளதாக அப்போதே தாம் கணித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆசிப் முகமது ஹனிஃப் என்பவர் 2003 ஆம் ஆண்டு டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள மதுபான விடுதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தினார்.

முகம்மது யசர் குல்சார் என்ற முன்னாள் மாணவர், பாகிஸ்தானில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற பயணிகள் விமானத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டியவர்களுக்கு உதவியுள்ளார்.

அப்துல் ரஹ்மான் என்ற முன்னாள் மாணவர் 2009 ஆம் ஆண்டு சோமாலியாவில் உள்ள தீவிரவாத குழுவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

தற்போது, இலங்கை தற்கொலை வெடிகுண்டுதாரி ஜமீல் முகம்மது தொடர்பில் கிங்ஸ்டன் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்