லண்டனில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நர்சுக்கு உயரிய விருது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டன் பாலத்தின் மீது தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலிய நர்சுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவருக்கு முதலுதவி செய்த நிலையில் அவுஸ்திரேலியரான கிரிஸ்டி போடென்(28) தீவிரவாதிகளால் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரது தீரச் செயலை ஆதரித்து செஞ்சிலுவை சங்கம் இந்த ஆண்டிற்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் பதக்கம் பெறுபவர்களில் ஒருவராக செவிலியர் கிரிஸ்டி போடெனை தெரிவு செய்து அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 19 நாடுகளில் இருந்து மொத்தம் 29 நர்சுகளுக்கு இந்த உயரிய விருதானது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இயற்கை பேரழிவினால் துயருறுபவர்கள் மீது இரக்கம் காட்டும் செவிலியர்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தால் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2017 லண்டன் தீவிரவாத தாக்குதலின்போது படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட 26 வயது ஹொட்டல் ஊழியர் அலெக்ஸாண்ட்ரே பிகார்ட் என்பவருக்கு கிரிஸ்டி போடென் முதலுதவி அளித்துள்ளார்.

தீவிரவாதிகளின் கத்திக்கு இரையான அலெக்ஸாண்ட்ரே பிகார்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அப்போது, தாம் ஒரு செவிலியர் எனவும், அவருக்கு முதலுதவி செய்ய அனுமதியுங்கள் என கூச்சலிட்டவாறே, ஆபத்து இருப்பது உணராமல் சம்பவப் பகுதிக்கு விரைந்துள்ளார் கிறிஸ்டி.

அடுத்த சில நிமிடங்களில் தீவிரவாதிகளால் செவிலியர் கிறிஸ்டியும் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

சில மணி நேரங்களுக்கு பின்னர் கிறிஸ்டியின் தோழி ஒருவரால் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஜூன் 3 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டனர்.

48 பேர் காயங்களுடன் தப்பினர், இதில் 21 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers