புதிய நீல நிற பாஸ்போர்ட் எப்போது வழங்கப்படும்? பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் முதல் நீல நிற பாஸ்போர்ட் அடுத்த மாதத்தின் துவக்கத்தில் வழங்கப்படும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின், பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின் பர்கண்டி வடிவமைப்பு(Burgundy design) கொண்ட பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விரைவில் புதிய பாஸ்போர்ட் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இனி பிரித்தானியாவின் பாஸ்போர்ட் நீல நிறத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

உள் துறை செயலாளர் Priti Patel புதிய நீல நிற பாஸ்போர்ட்டுடன்/PA MEDIA

இந்நிலையில் தற்போது 30 ஆண்டுகளுக்கான முதல் நீல நிற பிரித்தானியா பாஸ்போர்ட் அடுத்த மாதம் வழங்கப்படும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உள் துறை செயலாளர் Priti Patel, மீண்டும் ஒரு முறை நாட்டின் அடையாளத்தை கொண்டுள்ளோம். பிரக்ஸிட் உலகில், இங்கிலாந்திற்கு ஒரு புதிய பாதையை உருவாக்குவதற்கு, ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

இது அடையாள சின்னமான நீல மற்றும் தங்க வடிவமைப்புடன் திரும்புவதற்கு உதவியதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் 1921 முதல் 1988 வரை நீல நிற பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டது. அப்போதைய ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் உறுப்பினர்கள் வடிவமைப்புகளை ஒப்புக் கொண்டதன் பின்னர் நிறம் மாற்றப்பட்டது.

அதே சமயம் அப்போது, அதாவது1980-களில் இங்கிலாந்து தனது பாஸ்போர்ட்டின் நிறத்தை மாற்ற முறைப்படி கட்டாயப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரக்ஸிட் பற்றிய பேச்சு எடுத்தவுடனே, கடந்த 2017-ஆம் ஆண்டு நீல நிற பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கோடையில் இருந்து பிரித்தானியா பாஸ்போர்ட் இனி நீல நிறமாக இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய நீல நிற பாஸ்போர்ட் மற்றும் தற்போது பயன்படுத்தி வரும் Burgundy வடிவமைப்பு பாஸ்போர்ட் /PA, BBC

அதுவரை பர்கண்டி வடிவமைப்பு கொண்ட பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும். இது காலாவதியாகும் வரை பயணத்திற்கு செல்லுபடியாகும்.

நீல பாஸ்போர்ட்டுகளை பிரான்ஸ் நிறுவனமான தேல்ஸுக்கு சொந்தமான ஜெமால்டோ தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாஸ்போர்ட் அட்டையில் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸின் மலர் சின்னங்கள் இடம்பெறும் மற்றும் ஒரு புடைப்பு இருக்கும்.

மரங்களை நடவு போன்ற திட்டங்கள் மூலம் பாஸ்போர்ட்களின் உற்பத்தி கார்பன் தடம் நிகர பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், நீல நிற பாஸ்போர்ட்டுகள், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட 81 நாடுகளில் உள்ளது.

ஐரோப்பாவில், ஐஸ்லாந்து மற்றும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவைச் சேர்ந்தவர்கள் நீல பாஸ்போர்ட்களை எடுத்துச் செல்கிறார்கள், அதே நேரத்தில் இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பிரபலமான வண்ணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்