ராபர்ட் எஃப் கென்னடியை படுகொலை செய்தவருக்கு சிறையில் கத்திக்குத்து

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் சகோதரரான ராபர்ட் எஃப் கென்னடியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சிர்ஹான் சிர்ஹான் என்பவர் சிறைக்குள் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ பகுதியில் அமைந்துள்ள சிறையில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது.

தாக்குதலை அடுத்து உடனடியாக மீட்கப்பட்ட சிர்ஹான் சிர்ஹான், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும், தாக்குதலில் ஈடுபட்ட நபரை தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் இளைய சகோதரரான ராபர்ட் எஃப் கென்னடி 1968 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

பாபி என அறியப்பட்ட, அப்போது வெறும் 24 வயதேயான சிர்ஹான் சிர்ஹான் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிரபலமான ஹொட்டல் ஒன்றின் சமையலறையில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ராபர்ட் கென்னடி குற்றுயிராக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் மரணமடைந்தார்.

தமது சகோதரரும் அமெரிக்க ஜனாதிபதியுமான ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் ராபர்ட் கென்னடியும் கொல்லப்பட்டார்.

ஜான் எஃப் கென்னடியை அடக்கம் செய்யப்பட்ட அதே கல்லறைத் தோட்டத்திலேயே ராபர்ட் கென்னடியையும் அடக்கம் செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக 1969 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சிர்ஹான், பல நாட்கள் நீண்ட விசாரணைக்கு பின்னர் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

ஆனால் 1972 ஆம் ஆண்டு கலிபோர்னியா மரண தண்டனையை ரத்து செய்த நிலையில், சிர்ஹானுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பல முறை பிணையில் வெளிவந்த போதும் சிர்ஹானின் விடுதலையானது தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்