சுரங்கப்பாதையில் ஒலித்த ஒரு மர்மக்குரல், வைரல் வீடியோவால் வெளியான உண்மை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்சிலுள்ள சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் இனிமையாக பாடும் ஒரு பெண்ணின் குரலைக் கேட்ட ஒரு பொலிசார், அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என பார்க்கச் சென்றிருக்கிறார்.

அங்கு ஒரு பெண் கையில் சில பைகளுடன் ஏழ்மை கோலத்தில் இருந்தாலும் மிக இனிமையாக பாடிக்கொண்டிருந்திருக்கிறார்.

கேட்டதுமே நிச்சயம் இது இசையில் புலமை பெற்ற ஒருவரின் குரல் என்று எளிதாக கண்டுபிடித்துவிடும் அளவுக்கு இனிய குரல் அது.

அந்த பாடலை பதிவு செய்த அந்த பொலிசார், அந்த வீடியோவை சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்ய, அது உடனடியாக வைரலானது.

தனது பாடல் வைராலானது தெரியாமலே அந்த பெண் அங்கு பாடிக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த வீடியோவைக் கண்ட அவரது நண்பர்கள் சிலர் அவரது பெயர் Emily Zamourka (52) என்றும், அவர் ரஷ்யாவைச் சேர்ந்த, முறையாக இசை கற்ற ஒரு பெண்மணி என்றும் தெரிவித்துள்ளனர்.

24 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்த Emily, ஒரு கட்டத்தில் மிக மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட, மருத்துவமனைக்கு செலவு செய்தே ஏழ்மையாகிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் அவரது 10,000 டொலர் மதிப்புள்ள வயலினும் திருட்டுப்போக, இசை பயிற்சி கொடுத்து பிழைத்துக்கொண்டிருந்த பிழைப்பிலும் மண் விழுந்திருக்கிறது.

கடைசியாக வீட்டு வாடகையும் கொடுக்க முடியாமல் தெருவுக்கே வந்து விட்ட Emily, சாலையோரம் வசிக்கிறார்.

இந்நிலையில், வைரலான அவரது வீடியோவால், அவரது நண்பர்களிடம் இருந்து அழைப்பு வர, இனி எப்படியாவது எங்கேயாவது இசை மீட்டி பிழைத்துக்கொள்ளலாம் என்று கூறும் Emily, தனக்கு உதவ முயன்றுகொண்டிருப்போருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்