ஜார்ஜ் ஃபிளாய்டின் இறுதிநிமிட துயரங்கள்: வெளியான புதிய வீடியோ ஆதாரம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் காவலரால் கொல்லப்பட்ட இறுதி நிமிடத்தில் அவர் பேசிய பேச்சுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த மே மாதம் 25ம் திகதி அமெரிக்காவின் மின்னெபோலிஸ் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் டெரிக் சாவின் என்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவலரால் கழுத்தை அழுத்திக் கொல்லப்பட்டார்.

தனது முட்டியால் ஃபிளாய்டின் கழுத்தை காவலர் அழுத்திக்கொண்டிருக்க, தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஃபிளாய்ட் கூறிய இறுதி வார்த்தைகள் உலகத்தின் மனசாட்சியை இனவெறிக்கு எதிராக தட்டியெழுப்பியது.

அதைத்தொடர்ந்து, Black lives matter என்ற முழக்கத்தை முன்வைத்து இனவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், ஃபிளாய்ட் உயிரிழப்பதற்கு முன்னர் காவலர்களுக்கும் ஃபிளாய்டுக்கும் நடைபெற்ற உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

காவலர்களின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் கமெராவில் பதிவான ஓடியோவை குற்றம் சுமத்தப்பட்ட நான்கு காவலர்களில் ஒருவரான தாமஸ் லேன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜார்ஜ் ஃபிளாய்ட் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று 20 முறை கூறியுள்ளது பதிவாகியுள்ளது.

ஃபிளாய்டின் இந்த மரண ஓலத்தை சற்றும் பொருட்படுத்தாத காவலர் டெரிக் சாவின் அவரை வாயை மூடும்படி மிரட்டுவதும் அதில் பதிவாகியுள்ளது.

காவலர்கள், ஃபிளாய்டை தரையில் வீழ்த்தும் முன்னரே அவர், தனக்கு க்ளஸ்ட்ரோ ஃபோபியா இருப்பதாக, அதாவது நெரிசல் ஏற்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்படும் பிரச்னை இருப்பதாக அவர்களிடம் கூறுகிறார்.

ஆனால், அதையும் மீறி அவர் தரையில் வீழ்த்தப்படுகிறார். பிளாய்ட் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கூறும்போது டெரிக் அவரை பேசாமல் இருக்கும்படியும், பேசினால், ஆக்சிஜன் அதிகம் செலவாகும் என்று திமிராக கூறுவதும் பதிவாகியுள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட், காவலர்கள் உரையாடல் முழு வடிவம்

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்