கொடுத்த வாக்கை காப்பாற்றும் ரிஷப ராசியினரே! குருபெயர்ச்சி பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஐந்தில் உழைக்கும் வாழ்க்கைதான் ஐம்பதில் மகிழ்ச்சி தருமென நம்பும் நீங்கள், கடினமாக உழைத்து கரையேறுவதுடன், மற்றவர்களின் சொத்துக்கு ஒருபோதும் ஆசைப்பட மாட்டீர்கள்.

கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றித் தந்ததுடன், உங்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் ஒருபடி உயர்த்திய குருபகவான் 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களது ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைந்து பலன் தருவார்.

‘சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்’ என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே! கவலைகளையும், குழப்பத்தையும், தர்ம சங்கடமான சூழ்நிலையையும் தருவாரே! என்று கலங்காதீர்கள்.

குருபகவானின் பார்வை

குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டைப் பார்ப்பதால் பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டு. வி.ஐ.பிகளின் அறிமுகம் கிட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.

உங்களின் விரய வீடான 12ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் தன ஸ்தானமான 2ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அழகு, ஆரோக்யம் கூடும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் சப்தம விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் தன் பலம், பலவீனத்தை உணருவீர்கள். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் சளைக்காமல் போராடி சமாளிக்கும் சக்தி உண்டாகும்.

மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

உங்களின் அஷ்டமாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் இக்காலக்கட்டங்களில் பரபரப்பாக காணப்படுவீர்கள். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் குருபகவான் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களது திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள்.

மனைவியின் ஆரோக்யம் சீராகும். மனைவிவழி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், வீண் விரயங்கள், ஏமாற்றங்கள், தாழ்வு மனப்பான்மைகளெல்லாம் வந்து போகும். போலியானவர்களை கண்டு’பிடிப்பதில் ஒரு தடுமாற்றம் இருக்கும்.

வியாபாரிகளே! வியாபாரம் ஒரு வாரம் நன்றாக இருந்தால் மறுவாரம் வருமானம் இல்லாமல் போகிறதே என்று நினைத்து கலங்குவீர்கள். தொழிலை நம்பி ஒரு லோன் வாங்கலாம் என்று நினைத்தால் கூட முடியாமல் போகிறதே நிலையற்ற வருமானமாகி விட்டது என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். போட்டியாளர்களால் லாபம் குறையும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். எந்த ஒரு அதிரடி மாற்றங்களோ, புது முயற்சிகளோ வேண்டாம். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

இரும்பு, பெட்ரோகெமிக்கல், மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் முதலீடுகள் செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். கடையை இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள்.

உத்யோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி, நீங்கள் உழைத்தப் போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டுவிட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துபோகும்.

கன்னிப் பெண்களே! மனதை அலைபாய விடாதீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி காதல் வயப்படாதீர்கள். ஃபேஸ் புக், டிவிட்டர், இமெயில் அக்கவுண்ட் பாஸ்வேடையெல்லாம் ரகசியமாக வையுங்கள். யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புது நண்பர்களை தவிர்க்கவும்.

பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். ஃபைப்ராய்டு, மாதவிடாய் கோளாறு, முடி உதிர்தல், அடி வயிற்றில் வலியெல்லாம் வரக்கூடும். இரவில் நீண்ட நேரம் கண்விழித்திருக்க வேண்டாம். கண்ணிற்கு கீழ் கருவளையம் உண்டாகும். திருமணம் தாமதமாகும்.

மாணவ மாணவிகளே! சமயோஜித புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும். அறிவியல், கணிதப் பாடங்களில் முக்கியமான சமன்பாடுகளையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. நண்பர்களிடம் அரட்டைப் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங்களால் விரக்தியடையாதீர்கள். அலைந்து, திரிந்து சில வாய்ப்புகளைப் பெற வேண்டி வரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

அரசியல்வாதிகளே! வெறும் அறிக்கை மட்டும் போதாது, தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். உங்களின் நெருங்கிய சகாக்களை புதியவர்களிடம் அறிமுகப்படுத்தாதீர்கள். கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். அக்கம்பக்கம் நிலத்தாரை அனுசரித்துப் போங்கள். வழக்கில் அவசரம் வேண்டாம். ஆகமொத்தம் இந்த குருமாற்றம் சின்ன சின்ன இடையூறுகளையும், கஷ்டங்களையும் தந்தாலும் உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்த்தும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்