துடிப்புடன் செயல்படும் கடக ராசியினரே! குருபெயர்ச்சி பலன்கள்

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

இஷ்டப்பட்டு வாழும் வாழ்க்கையையே பெரிதென நினைக்கும் மனசுடைய நீங்கள், எங்கும் எப்போதும் நல்வழியிலேயே செல்லக் கூடியவர்கள். தீர்க்கமான முடிவுகளை எடுத்து, நிதானமாக செயல்படுவீர்கள்.

இதுவரை உங்களின் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைகழித்தாரே! முடிவுகள் எடுப்பதில் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் தந்தாரே! பிறர் மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தி வந்தாரே!

அப்படிப்பட்ட குருபகவான் இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் பொங்கி எழாமல் எதிலும் பொறுமை காப்பது நல்லது. இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களை தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

குருபகவானின் பார்வை

குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள்.

பயணங்களால் பலனடைவீர்கள். வேற்று மதத்தவர்களின் அறிமுகம் கிடைக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உங்களின் உத்யோகஸ்தமான 10ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும்.

பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். சிலர் வேலையில் இருந்துக் கொண்டே பகுதி நேரமாக தொழில் தொடங்க வாய்ப்பிருக்கிறது. அடகிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4ம் பாதம் துலாம் ராசியில் 02.09.2017 முதல் 05.10.2017 வரை குருபகவான் செல்வதால் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 06.10.2017 முதல் 07.12.2017 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கட்டிட வேலைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் முடியும். என்றாலும் தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.

போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களின் சஷ்டம பாக்யாதிபதியான குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் புகழ், கௌரவம் உயரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

குருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்

14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்தில் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும்.

உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்து கொள்வார்கள். வருமானம் உயரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உங்களை தாழ்த்திப் பேசியவர்களெல்லாம் மனம் திருந்தி வந்து மன்னிப்புக் கேட்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்

07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்ர கதியில் செல்வதால் உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களை ஒவ்வொன்றாக சரி செய்து கொள்ளப்பாருங்கள். சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொள்ளாதீர்கள்.

புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது.

வியாபாரிகளே! போட்டிகளை சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டி வரும். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிக சம்பளம் கொடுத்தும், சலுகைகள் கொடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

உத்யோகஸ்தர்களே! ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொண்டாலும், நேரடி உயரதிகாரி உங்களைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டிருப்பார். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள்.

உங்களை விட வயதில் குறைந்தவர்கள், படிப்பில், தகுதியில் குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதைக் கண்டு ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பள உயர்வு, பதவி உயர்வு சற்று தாமதமாகும்.

கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். நண்பர்கள் விவகாரத்தில் கவனமாக இருங்கள். நண்பர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கல்யாணம் தள்ளிப் போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.

மாணவ மாணவிகளே! தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது, ஓயாது படித்து விடைகளை எழுதி பாருங்கள். கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். தகாத நட்புகளை தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினரே! சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்பாருங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தலைமையை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். மாவட்டம், வட்டத்திடம் அனுசரித்துப் போவது நல்லது. கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது.

விவசாயிகளே! பக்கத்து நிலக்காரருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். வரப்புச் சண்டை, வாய்க்கால் தகராறு என்று நேரத்தை வீணடிக்காதீர்கள்.

இந்த குரு மாற்றம் உங்களுக்கு சிரமங்களையும், இடமாற்றத்தையும் தந்தாலும் முயன்று தவறி ஓரளவு முன்னேற வைக்கும்.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்