ஏ.ஆர் ரஹ்மான்! உலகளவில் பிரபலமான இசை அரசன். புகழின் உச்சிக்கே சென்றாலும் தன்னடக்கத்துடன் வலம் வரும் இந்த தமிழனின் குணம் தான் அவரின் உச்சத்துக்கு முக்கிய காரணம் என கூறலாம்.
ஒன்பது வயதில் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் தந்தை ஆர்.கே சேகர் ஸ்டுடியோவுக்கு சென்று உதவியாக இருப்பது, இசையை கற்று கொள்வது என தனது பயணத்தை ரஹ்மான் தொடங்கினார்.
திடீரென தந்தை இறந்து விட குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கு வந்தது.
தந்தை விட்டு சென்ற இசை கருவிகளை வாடகைக்கு விட்டு தங்கள் பிழைப்பை நடத்தினார்கள் ரஹ்மான் குடும்பத்தினர்.
சரி நாமும் இசை கருவியை வாசித்தால் இன்னும் பணம் கிடைக்குமே என ரஹ்மான் நினைக்க பிற இசையமைப்பாளர்களுக்கு கீ-போர்ட் வாசிக்க தொடங்கினார்.
அதன்பின்னர் தனியாக ஸ்டுடியோவை கட்டி பல விளம்பரங்களுக்கு இசையமைத்தார்.
அதில் ஒன்று தான் புகழ்பெற்ற லியோ காபி விளம்பரம், இது தான் இயக்குனர் மணிரத்னத்தை சந்திக்கும் வாய்ப்பை ரஹ்மானுக்கு ஏற்படுத்தி கொடுத்தது.
இதையடுத்து மணிரத்னத்தின் ரோஜா படத்துக்கு ரஹ்மான் முதன் முதலாக இசையமைத்தார்.
அதிலிருந்து எல்லாமே வெற்றி தான், இந்தி திரைப்படங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள், ஆஸ்கர் விருதுகள் என பெயரும், புகழும் ரஹ்மான் வீட்டு வாசலை தேடி வந்தது.
இன்று தனது திறமை மற்றும் உழைப்பால் ரஹ்மானின் இசை உலகெங்கிலும் பரவி கிடக்கிறது.
கனடாவின் ஒன்றாறியோவில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர் ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரஞ்ச் விளம்பரத்திலும் அவர் இசை ஒலிக்கிறது. இவ்வளவு உலக புகழையும் தனது தலையில் ஏற்றி கொள்ளாமல் தனது அடுத்த இலக்கை நோக்கி பயணிப்பதில் தான் ரஹ்மான் மற்றவர்களை விட மாறுபடுகிறார் என கூறினால் அது மிகையாகாது!