பிரான்ஸ் விமான நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: 300 மில்லியன் யூரோ இழப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் விமான நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 269 மில்லியன் யூரோக்கள் இழப்பை சந்தித்துள்ளதாகவும், வேலை நிறுத்தம் தொடர்ந்தால், ஆண்டிறுதிக்குள் 300 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்படலாம் என்றும் பிரான்ஸ் விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்தில் தொடரும் ஊதிய பிரச்சினை அதன் லாபத்திற்கு நிச்சயம் வேட்டு வைத்துள்ளது எனலாம்.

பிரான்ஸ் விமான சேவையை நிர்வகிக்கும் ஏர் பிரான்ஸ் - KLM குழுமம் ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் 25 முதல் 30 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்படுவதாகவும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் நடைபெற்ற வேலை நிறுத்தங்களால் 75 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தேவை அதிகம் உள்ள இது போன்ற கால கட்டங்களில் நம்மால் லாபம் அடைய முடியாமல் போனது பெரிய துரதிருஷ்டம் என குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுவரை 13 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தகட்ட வேலை நிறுத்தம் மே மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகள் நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் ஏற்க விரும்புகிறார்களா இல்லையா என தனித்தனியே தொழிலாளர்களை சந்தித்து கேட்டு அவர்களது வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நிறுவன தலைமை முயற்சி செய்து வருகிறது.

அந்த ஒப்பந்தத்தின்படி 2018 முதல் 2021 வரையிலான நான்காண்டுகளில் 7 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு அளிப்பதாகவும் கூடுதலாக 2018இல் தோராயமாக ஒரு சதவிகித உயர்வு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொழிலாளர் சங்கங்கள் உடனடியாக 5.1 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றன.

தனித்தனியே தொழிலாளர்களை சந்திப்பதால் எங்களது முடிவுகளை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள தொழிலாளர் சங்கத் தலைவர்கள் 2017 ஆம் ஆண்டு, விமான நிறுவனத்தின் வருவாய் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமானதாக இருந்ததை சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில் ஏர் பிரான்ஸ் - KLM குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரியான Jean-Marc Janaillac, தான் முன்வைத்துள்ள ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ராஜினாமா செய்ய உள்ளதாக மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்