மனிதனாலேயே மனிதனுக்கு அழிவு!

Report Print Nayana in கட்டுரை
521Shares
521Shares
lankasrimarket.com

உலகில் இதுவரை 22 வகையான யானை இனங்கள் அழிந்து விட்டதாகவும் ஆதிகாலத்தில் 24 வகை யானைகள் வாழ்ந்துள்ளதாகவும் வன உயிரியல் ஆய்வுகள் கூறுகின்றன.

தற்போது, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உயிர்வாழ்கின்றன.

தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

தற்போது வனப்பகுதியை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் மீதான யானைகளின் தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இலங்கையில் வடகிழக்கு பகுதியை பொறுத்தமட்டில் விளை நிலங்களை நாசம் செய்வதாகவும், ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதாகவும் யானைகள் மீது கிராம மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால், யானைகளின் வாழிடத்தை ஆக்கிரமித்ததும், அவை வாழும் பகுதியில் அத்துமீறி ஊடுருவியதும் தான், இந்த நிலை ஏற்படுவதற்கு காரணம் என்று வன உயிரின ஆர்வலர்கள் காரணம் சொல்கின்றனர்.

தாய் யானையால் கைவிடப்பட்ட குட்டி யானைகள், மற்றும் ஊருக்குள் ஊடுருவும் யானைகள் சில சமயங்களில் கிராமவாசிகளை தாக்குவதாகவும் அதேவேளை கிராமவாசிகள் அவற்றை தாக்கி அழிப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுவது தான் முக்கியமான பிரச்சினையாகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது.

எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் அழிக்கப்படுவதே என்றும் கூறப்படுகிறது.

யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது

மனிதரைப் போலவே யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்ட விலங்கு இனமாகும். தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு அடர்ந்த காடுகள் நல்ல வாழ்விடமாகும்.

ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகளாகின்றன. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவதில்லை.

யானைகளின் வாழ்விடங்களை மக்கள் ஆக்கிரமித்து மேற்கொள்ளும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குடியிருப்புகள், வழிப்பாதைகள், காட்டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், விறகு பொறுக்குதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. மேலும் யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுதல் ஆகும். அதிலும் பெரியவையும், நீண்ட காலம் வாழ்வனவும், குறைவான காலத்தி இனம் பெருக்குபவையுமே வேட்டையாடப்படுகின்றன.

ஒரு யானை சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது. யானைக்கு தினசரி 200 முதல் 250 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே, ஒரு நாளில் மூன்றில் இரண்டு பங்கு நேரத்தை உணவைத் தேடுவதிலேயே செலவிடுகிறது. ஒரு நாளைக்கு 100, 150 முதல் 200 லீற்றர் தண்ணீர் வரை குடிக்கிறது.

மனிதனைப்போல, யானை தினசரி தண்ணீரில் குளிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளது. ஆகவே அவை அதிக நீர் வலம் உள்ள இடங்களையே வாழ்விடங்களாக தெரிவு செய்கின்றன.

யானைகள், மனிதர்களால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுகின்றன. ஆசியாவில் யானைகள் விளைநிலங்களுக்குள் ஊடுருவுவதால் கொல்லப்படும் அதேவேளை, ஆபிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது குட்டிகளாக உள்ளன.

ஆதிகாலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்த போது யானைகள் தாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம், அன்று யாருமே யானைகளை துன்புறுத்தியோ, தொந்தரவு செய்தோ இருக்க மாட்டார்கள் அவர்கள் விலங்குகளுடன் வாழப் பழகிகொண்டனர்.

ஆனால் தற்கால நகர்ப்புற மனிதர்கள் விலங்குகளை எங்கு கண்டாலும் தாக்குகிறார்கள், துன்புறுத்துகிறார்கள். இவர்களுக்கு விலங்குகள் மீது கருணை உள்ளதோ இல்லையோ அவை மீதான அதிகமான பயம் காணப்படுகின்றது. அதனால்தான் அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றார்கள் என்று கூறலாம்.

யானைகளை மனிதர்கள் தமது சுயதேவைகளுக்காகப் பயன்படுத்துவதைக் காணலாம். குறிப்பாக கோவில், திருவிழாக்கள், பெரஹராக்கள், யானை சவாரி, சர்க்கஸ்கள் என தங்களுடைய பல சுய இலாபங்களுக்காக அவற்றை பலக்கப்படுத்துகின்றார்கள். இதன்போது அவை சரியாக செயற்பட வில்லை என்றால் ஆயுதம் கொண்டு தாக்கப்படுவதையும் காணலாம்.

யானைகளிடமிருந்து எவ்வாறு எம்மை பாதுகாக்கலாம் ?

வனப்பகுதிகளில் வாழும் யானைகள் மக்கள் வாழ்விடம் தேடி வந்தால் அவற்றை தாக்குவதை தவிர்த்து விட்டு முதலில் வன பாதுகாப்பு பிரிவினருக்கு முறைப்பாடு ஒன்றை கொடுக்கலாம். அவர்கள் தங்களுடைய பயிற்சிப் பெற்ற குழுக்களைக் கொண்டு புத்தி சாதூரியமாக அவற்றை வெளியேற்றுவார்கள். யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பிரதேசவாசிகள், யானைகள் அதிகமான நடமாடும் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நடமாட்டத்தை தவிர்த்தல் வேண்டும்.

யானைகளுக்கு பொதுவாக துரத்தும் ஆற்றல் குறைவு, அவை விரைவில் களைப்படையும். குறைந்தது 100-150 கிலோமீற்றருக்கு மேல் அவற்றால் ஓடவே முடியாது. ஆகவே, யானை தாக்க வருகின்றது என அறிந்தால் திசை மாறி மாறி ஓடி யானையை குழப்பி விடுவதால் அது வேறு திசைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.

மேலும் யானைகள் மனிதனை தாக்கும் எண்ணம் கொண்டவை அல்ல என்பதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவை உணவு, குடிநீர், வாழ்விடம் தேடியே பிரதேசங்களுக்குள் ஊடுருவுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.

அவற்றை துன்புறுத்தும் போதுதான் அவை திருப்பித் தாக்குகின்றன. அதனால் தாக்குவதை தயவுசெய்து தவிர்த்திடுங்கள். அதன் வாழ்விடங்களை அழிக்காதீர்கள். அத்துடன் யானை பயம் இன்னும் மக்கள் மத்தியில் இருப்பதால் தான் 100இற்கு 50வீதமாக காடுகள் இன்னும் பாதுகாப்பாக இருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை!

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments