2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் : சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் எறும்பைபோல் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள்

Report Print Kavitha in ஜோதிடம்

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.

அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

(மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை)

சிம்ம ராசி நேயர்களே,

விகாரி வருடத் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுது குரு பகவான் 5-ம் இடத்தில் இருந்து 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே சுறுசுறுப்போடு பணிபுரியும் வருடமாக இந்த வருடம் அமையப் போகின்றது.

வருடத்தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு வீற்றிருக்கின்றார். எனவே லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

மிதமிஞ்சிய பொருளாதாரத்தில் மிதக்கப் போகிறீர்கள். அதே நேரத்தில் விரயாதிபதி சந்திரன் விரய ஸ்தானத்தில் வீற்றிருக்க ஆண்டு தொடங்குவதால் இந்த ஆண்டு விரயங்களும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சேமிப்பும் உங்களுக்கு அதிகரிக்கும்.

செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கும் நீங்கள் இந்த ஆண்டு தொழிலில் முத்திரை பதிக்கப் போகிறீர்கள். பொதுவாழ்விலும் புகழ் குவிக்கப் போகிறீர்கள்.

செவ்வாய் பலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது. யோகம் செய்யும் கிரகமான செவ்வாய் 10-ல் பலம் பெற்றிருக்கும் பொழுது அங்காரக ஸ்தலங்களில் அடியெடுத்து வைத்து வழிபாடு செய்வது நல்லது.

பாக்கிய ஸ்தானம், மற்றும் புத்திர ஸ்தானம் எனப்படும் இடத்தில் கேது வீற்றிருப்பதால் நாக சந்நிதிகளுக்கு சென்று யோகபலம் பெற்றநாளில் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

7-ல் சுக்ரன் இருப்பதால் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்யும் யோகம் உண்டு. அதுமட்டுமல்லாமல் பெண்வழிப் பிரச்சினைகள் அகலும்.

5-ல் கேது இருப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வெளியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளாக இருந்தால் அன்றாடம் அவர்களுடன் பேசிப்பேசி தன்னம்பிக்கையை ஊட்டுவது நல்லது.

ஒருசில பிள்ளைகள் உங்கள் பேச்சினைக் கேட்காமல் மனம் போன போக்கில் சில காரியங் களைச் செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படலாம். எனவே அன்றாடம் அவர்களோடு பேசி அவர்கள் மனதில் நினைத்தவற்றை நீங்கள் தெரிந்து கொள்வதும் நல்லது.

தனலாபாதிபதியான புதன் வருடத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கும் புதன் அதிபதியாவார். அதே நேரத்தில் ராசிநாதன் சூரியன் உச்சம் பெற்றிருக்கின்றார்.

இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது, கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரெனப் புதிய பொறுப்புகளும், தலைமைப் பதவிகளும் கூட வரலாம்.

பொதுவாக ஆண்டின் தொடக்கத்தில் 4 கிரகங்கள் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றன. வலிமையான கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் பொழுது அதற்குரிய ஆதிபத்யங்களும் நல்ல இடமாக இருப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தனுசு குருவின் சஞ்சாரம்

(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)

குருவினுடைய பார்வை 1, 9, 11 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதால் என்னதான் உங்களுக்கு திசாபுத்தி வலிமை இழந்திருந்தாலும் குரு பார்வையால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். ஆரோக்கியச் சீர்கேடுகள் மாறும். பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவர்.

9-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் ஒளிமயமான எதிர்காலம் உருவாகப் போகின்றது. பொன், பொருட்களின் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாட்களாக நடைபெறாத சில காரியங்கள் இப் பொழுது துரிதமாக நடைபெற்று சந்தோஷத்தை அதிகரிக்கும்.

‘ஐந்திலே குருதான் வந்தால் அனைத்திலும் வெற்றி கிட்டும்’ என்பது ஜோதிட நியதி, அந்த அடிப்படையில் மட்டுமல்லாமல் 5-ம், 9-ம் மிஞ்சும் பலன் தரும் என்பதற்கு ஏற்ப தொழிலில் முன்னேற்றம் வரப்போகின்றது.

புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபம் அதிகரிக்கப் புதிய யுக்தி களைக் கையாளுவர். திடீர் திருப்பங்கள் பலவற்றையும் சந்திக்கும் நேரமிது.

9-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். சிந்தை மகிழும் விதத்தில் சிறப்பான பலன்கள் நிறைய வந்து சேரும். வந்த வரன்களை பரிசீலனை செய்து முடிக்க முன்வருவீர்கள்.

தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். சொந்தம் சுற்றமெல்லாம் ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றம் வரப்போகின்றது. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பல நாட்களாக நிலுவையில் இருந்த பஞ்சாயத்துக்கள் இப்பொழுது உங்களுக்குச் சாதகமாக முடியும்.

குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார மேம்பாடு அதிகரிக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். உங்களுக்கோ, உங்கள் வாரிசுகளுக்கோ வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு இப்பொழுது கைகூடும்.

வெளிநாடு செல்லும் முயற்சிக்காக பெரும்தொகை கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது எளிதில் கைகூடும். கேட்காமலேயே சிலர் கொடுக்க முன்வருவர்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்குப் பயந்து புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். மண், பூமி விற்பனை செய்பவர் களுக்கு கட்டிடம் கட்டி விற்கும் பணியை மேற்கொள்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

விருச்சிகச் சனியின் சஞ்சாரம்

(18.5.2019 முதல் 28.10.2019 வரை)

இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயும் உலா வருகின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் விருச்சிகத்தில் இருந்தபடி 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார்.

இழப்புகளை குறிக்கும் 8-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்பு வந்து சேரும். பழைய கூட்டாளிகளால் ஒருசிலருக்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.

அவர்களை விலக்கிவிட்டு ஒன்று முழுமையான தொழிலை நீங்கள் ஒப்புக் கொள்ளலாம். அல்லது சுய ஜாதகத்தில் திசாபுத்தி வலுவிழந்திருந்தால் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ளலாம். மேலும் ஒரு சிலருக்கு அலுவலக மாற்றங்கள் இடமாற்றங்கள் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகும். அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

அருளாளர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனை அப்போதைக்கப்போது கைகொடுக்கும். அர்த்தாஷ்டம குருவிற்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் திடீரென முடிவாகலாம். வழக்குகள் சாதகமாக முடியும். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். இல்லம் வாங்கும் யோகமும் இக்காலத்தில் உருவாகலாம்.

குருவின் பார்வை பலத்தால் 10-ம் இடமும், 12-ம் இடமும் புனிதமடைவதால் ஓய்வில்லாமல் உழைக்கும் சூழ்நிலையும், அந்த உழைப்பிற்கேற்ற பலனும் இப்பொழுது கிடைக்கும். கடன்சுமை பாதிக்கு மேல் தீரும்.

வரவேண்டிய பாக்கிகள் இப்பொழுது தானாக வந்து சேரும் நேரமிது. அறுபத்து மூவர் வழிபாடும், ஆஞ்சநேயர் வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளும் மலைபோல் வந்த துயரை பனிபோல் விலக்கும்.

சனியின் சஞ்சார நிலை

ஆண்டு முழுவதும் சனி பகவான் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 2, 7, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது.

எனவே பிரிந்த உறவினர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு உண்டு. சுபச்செலவுகள் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான சுற்றுப்பயணங்கள் உண்டு. இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். தொழிலில் லாபம் இருமடங்காக வந்து சேரும். சனியின் வக்ர காலத்தில் வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச்செல்வது நல்லது.

ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் ராகுவும், 5-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வங்கிகளில் கடனுதவி பெற்று வாடகை இடத்தில் இயங்கும் தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றுவது பற்றிச் சிந்திப்பீர்கள். கேதுவின் பலத்தால் பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். சுபவிரயங்கள் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

சனி-செவ்வாய் பார்வைக்காலம்

(14.4.2019 முதல் 23.6.2019 வரை)

இக்காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. எதை செய்தாலும் மூத்தவர்களை கலந்து ஆலோசித்து செய்வது நல்லது.

பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வழிபாடுகள் தேவை. பெற்றோர்களின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகின்றது. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். கல்வியில் தேர்ச்சி பெற்று மற்றவர்களால் பாராட்டுக்களைப் பெறுவர்.

பெண் குழந்தைகளுக்கான திருமண வாய்ப்புக் கைகூடும். ஆன்மிக சுற்றுலாக்கள் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிரிந்து சென்ற உடன்பிறப்புகள் திரும்பி வந்திணைவர்.

தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளை வாங்கும் முயற்சி கைகூடும். புதிய தொழிலுக்கு உங்கள் பெயர் பரிசீலனை செய்யப்படும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். திறமை பளிச்சிடும். வாகனம் வாங்க சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். குரு வழிபாடும், திசைமாறிய துர்க்கை வழிபாடும் செல்வ நிலையை உயர்த்தும்.

வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு

சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்து தும்பிக்கையானை நம்பிக்கையோடு வழிபடுவது நல்லது. குரு கவசம் பாடி குரு வழிபாட்டையும் மேற்கொண்டால் குதூகலமான வாழ்க்கை அமையும்.

- Daily Thanthi

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்