பயணியர் வாகன விற்பனை..பிப்ரவரி மாதத்தில் சரிவு

Report Print Santhan in வர்த்தகம்

பயணியர் வாகன விற்பனை, உள்நாட்டில் பிப்ரவரி மாதத்தில், 1.11 சதவீதம் சரிவை கண்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டிற்கான கணிப்பை எட்ட முடியாமல் போகலாம் எனவும், இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, சியாம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பயணியர் வாகன விற்பனை, பிப்ரவரி மாதத்தில், 1.11 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. எட்டு மாதங்களில் இது ஏழாவது சரிவாகும். இதனால், நடப்பு நிதியாண்டின்கணிப்பை எட்ட முடியாமல்போகலாம்.

வரும் தேர்தல், வட்டி அதிகரிப்பு, காப்பீட்டு கட்டண உயர்வு போன்ற காரணங்களால், விற்பனை இலக்கை எட்டுவது கடினமாகக் கூடும்.பிப்ரவரி மாதத்தில், உள்நாட்டில், இரண்டு லட்சத்து, 72 ஆயிரத்து, 284 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், இதே மாதத்தில், இரண்டு லட்சத்து, 75 ஆயிரத்து, 346 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், பயணியர் வாகன விற்பனை, 3.27 சதவீதம் அதிகரித்து, 30 லட்சத்து, 85 ஆயிரத்து, 640 ஆக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 29 லட்சத்து, 87 ஆயிரத்து, 859 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.பயணியர் வாகன விற்பனை, நடப்பு நிதியாண்டில், 8 முதல், 10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது.

ஆனால், மூன்றாவது காலாண்டிலிருந்து நிலைமை மாறியதால், 6 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி இருக்கும் என தெரிகிறது.கார்கள் விற்பனையும், பிப்ரவரி மாதத்தில், 4.33 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. ஒரு லட்சத்து, 79 ஆயிரத்து, 122 கார்கள், 2018 பிப்ரவரியில், விற்பனை ஆகியிருந்த நிலையில், இந்த பிப்ரவரியில், ஒரு லட்சத்து, 71 ஆயிரத்து, 372 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

இரு சக்கர வாகனங்களின் விற்பனையும், 4.22 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனையும், பிப்ரவரியில், 0.43 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என்று சியாம் தெரிவித்துள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers