ஒரு குழந்தை, இரு தாய்கள்: குழந்தைக்கான போட்டியில் ஒரு தாய் செய்த அதிர்ச்சி செயல்!

Report Print Balamanuvelan in கனடா

ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களுக்கிடையில் குழந்தையை யார் வைத்திருப்பது என்ற போட்டியில், ஒரு தாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தலைமறைவானார்.

இன்னொரு தாய் கண்ணீர் மல்க குழந்தையைக் கண்டுபிடித்துத் தருமாறு விடுத்த கோரிக்கையின் பலனாக இண்டர்போல் பொலிஸார் முதல் ஏராளமானோர் குழந்தையை தேடி வந்தனர்.

இந்நிலையில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கேட்பதற்கு ஒரு சிறிய செய்தி போல் தோன்றினாலும், இது இடியாப்பச் சிக்கல் கொண்ட ஒரு செய்தி.

இதை விளக்க வேண்டுமானால் 2012ஆம் ஆண்டிற்கு செல்ல வேண்டும். 2012ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் Tasha Brown மற்றும் Lauren Ann Etchells ஆகிய ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களும் திருமணம் செய்து கொண்டனர்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி Lauren, Kaydance Page Etchellsஐப் பெற்றெடுத்தார்.

அவளது பிறப்புச் சான்றிதழில் பெற்றோர் என்ற இடத்தில் Tasha Brown மற்றும் Lauren Etchells ஆகிய இருவரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி Lauren மற்றும் Tasha இருவரும் பிரிந்தனர்.

குழந்தை Kaydance, Laurenஉடன் இருக்க, யார் குழந்தையை வளர்ப்பது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Lauren கனேடிய மற்றும் பிரித்தானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர். எனவே அவரது மகளுக்கும் பிரித்தானியக் குடியுரிமை உண்டு.

ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் குழந்தையின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும், குழந்தைக்கு கனேடிய பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பிக்க கூடாது என்றும் வான்கூவரை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் 2016ஆம் ஆண்டு, Lauren தனது புதிய கணவரான Marco van der Merwe, அவருக்கு பிறந்த மகனான Marcus ஆகியோருடன், 19 மாதக் குழந்தையான Kaydanceஐயும் தூக்கிக் கொண்டு, நீதிமன்ற உத்தரவை மீறி, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.

Laurenஐக் காணவில்லை என்பதை அறிந்த Tasha, தனது மகளான Kaydanceஐக் காணவில்லை என பொலிசில் புகாரளித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறியதையடுத்து இண்டர்போல் Laurenஐக் காணவில்லை என அவர் மீது சிவப்பு நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.

இதற்கிடையில், தங்கள் பிரித்தானிய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி நாடு நாடாக பயணித்து வந்த Lauren, ஆங்கிலக் கால்வாயிலுள்ள Jersey தீவுக்கு சென்றுள்ளனர்.

அங்கு முறையான பாஸ்போர்ட் இல்லாமல் Lauren, தனது மகள், மகன் மற்றும் பெற்றோருடன் சுற்றியதால், பொலிசாரின் சந்தேகக் கண்களில் சிக்கினர்.

பின்னர் வழக்கின் தீவிரத்தை அறிந்து கொண்ட பொலிசார், அனைவரையும் கைது செய்து, பெரியவர்களை சிறையில் அடைத்துள்ளதோடு, குழந்தைகள் இருவரையும் குழந்தைகள் காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்குப்பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதை அறிந்த Tasha, மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதோடு, தன் குழந்தையைக் கண்டுபிடிக்க உதவிய, மற்றும் தனக்கு இந்நாள் வரை ஆதரவளித்து வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். வழக்கு மீண்டும் தொடர்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்