டாக்சிக்கு பணம் இல்லாததால் சாரதியால் சிறைபிடித்து வைக்கப்பட்டாரா இளம்பெண்?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் டாக்சிக்கு கொடுக்க கையில் பணம் இல்லாததால் தன்னை சிறை பிடித்து வைத்ததாக இளம்பெண் ஒருவர் புகாரளித்துள்ளார்.

Coquitlamஐச் சேர்ந்த Carly Musgrave என்ற பெண், திங்களன்று பணிக்கு செல்வதற்காக டாக்சி ஒன்றைப் பிடித்ததாகவும், அலுவலகத்திற்கு அருகில் சென்றபோதுதான், தன் கையில் பணம் எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்ததாகவும் கூறுகிறார்.

அலுவலகத்தின் உள்ளே சென்று யாரிடமாவது பணம் வாங்கி வருவதாக தான் கூறியதாகவும், ஆனால் டாக்சியின் சாரதி தனது விலையுயர்ந்த மொபைலை கொடுத்துவிட்டு காரில் இருந்து இறங்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கிறார்.

தான் காரின் கதவைத் திறந்து, தரையில் காலை வைத்ததும், சாரதி காரை பட்டென கிளப்பிச் சென்றதாகவும், தன் கால் தரையில் உரசிக்கொண்டே சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பின்னர் காரின் கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டிய சாரதி தன்னை எங்கோ கொண்டு செல்ல முயன்றதாகவும், தான் பொலிசாரை உதவிக்கு அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், டாக்சியின் சாரதியோ, தான் மொபைலை கொடுத்துவிட்டு சென்று பணம் வாங்கி வருமாறு கூறியது உண்மைதான் என்றும், மற்றபடி Carly கூறியதில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.

தான் டாக்சியை கிளப்பியது Carlyயின் பாதுகாப்புக்காகத்தான் என்றும், அவர் ஓடும் வண்டியிலிருது இறங்க முற்பட்டதாலேயே அவ்விதம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

அத்துடன் தான் Carlyயை எங்கோ கொண்டு செல்ல முயலவில்லை என்றும், பணம் எடுப்பதற்காக அவரது வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்ல முற்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.

சாலையில் நிகழ்ந்திருந்த விபத்து குறித்து விசாரித்துக்கொண்டிருந்த பொலிசார் உதவிக்கு வந்ததாக Carly தெரிவிக்க, சாரதியோ, தான்தான் பொலிசாரை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சாலையில் நிகழ்ந்திருந்த விபத்து குறித்து விசாரித்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவத்தில் தலையிட்டதாக தெரிவித்துள்ள பொலிசார், யாரும் யாரையும் சிறைப்பிடித்தெல்லாம் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் டாக்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை பெற்றுத்தரும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனராம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்