சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனை படைத்த கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களும், இங்கிலாந்து 161 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் இந்திய அணி 168 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. போட்டியின் 3வது நாளான நேற்று விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

கோஹ்லி 197 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்த சதத்தின் மூலம் விராட் கோஹ்லி இதுவரை இந்த தொடரில் 440 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்து மண்ணில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 1990ஆம் ஆண்டு அசாருதீன் 426 ஓட்டங்கள் எடுத்திருந்தார். மேலும் கோஹ்லிக்கு இது 23வது சதம் ஆகும்.

118 இன்னிங்ஸில் அவர் 23 சதங்களை எட்டியதன் மூலம், பிராட்மேன்(59 இன்னிங்ஸ்), கவாஸ்கர்(109), ஸ்டீவன் சுமித்(110) ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

அத்துடன் அணித்தலைவராக 38 டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்கள் அடித்து 3வது இடத்தைப் பிடித்துள்ளார். சுமித் (25 சதங்கள்), ரிக்கி பாண்டிங் (19 சதங்கள்) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்