டோனியின் இடத்தை நிரப்புவது மிகக்கடினம்: இந்திய அணிக்கு ஆடம் கில்கிறிஸ்ட் வழங்கிய அறிவுரை

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதான ஒரு காரியம் அல்ல என, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி ஓய்வை அறிவித்தது முதலே அவருடைய இடத்தை பூர்த்தி செய்ய முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது.

சஹா, தினேஷ்கார்த்திக், பார்திவ் படேல், ரிஷாப் பந்த் என வரிசையாக பல வீரர்களை களமிறக்கி சோதித்து பார்த்தாலும், சரியான ஒரு வீரரை அடையாளம் காண முடியாததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த நிலையில் பெங்களுருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், இந்திய அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் பிரிவில் டோனியின் பங்கு மிகப்பெரியது. அதனை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.

அவுஸ்திரேலிய அணி பிராட் ஹேடின் ஓய்விற்கு பிறகு கிரகாம் மனு, மேத்யூ வேட், பீட்டர் நெவில், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், பிறகு டிம் என சரியான ஒரு வீரரை தேர்வு செய்வதில் திணறி வருவதை போலவே, இந்திய அணியும் வீரர்களை மாற்றி திணறி வருகிறது.

வீரர்களை விறுவிறுப்பாக எடுத்து உடனே வெளியேற்றுவதால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். இது அவர்கள் ஆட்டங்களை வெளிப்படுத்துவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே ரிஷப் பந்த்துக்கு தொடர்ச்சியாக கணிசமான வாய்ப்புகளை வழங்கி அவரிடமுள்ள சிறந்தவற்றை வெளியே கொண்டு வரவே முயற்சிக்க வேண்டும் என கில்கிறிஸ்ட் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்