டூபிளீசிஸ்-வாட்சன் போட்டியை முடித்துவிட்டு வந்திருக்க வேண்டும்: சென்னை அணித்தலைவர் டோனி

Report Print Kabilan in கிரிக்கெட்

நல்ல தொடக்கத்துக்குப் பிறகு டூபிளீசிஸ், வாட்சனே ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும் என சென்னை அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி-சென்னை அணிகள் மோதின. டெல்லி அணி நிர்ணயித்த 148 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ், 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம் மே 12ஆம் திகதி நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணி உடனான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது.

இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்றது குறித்து சென்னை அணித்தலைவர் டோனி கூறுகையில், ‘இதுதான் வழக்கமாக இறுதிக்கு வரும் வழி, கடந்த ஆண்டு ஒரு விதிவிலக்கு. இந்தப் போட்டியில் வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்ட விதம் அபாரமானது.

இலக்கை விரட்ட ஆடிய பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆட்டத்தை 7.30 மணிக்கு தொடங்குவதால் பிட்ச் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். சீக்கிரம் தொடங்குவதால் பிட்ச் பராமரிப்பாளர்கள் அதிகம் தண்ணீர் விட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் கூடுதல் சாதகமாக இருந்தது.

நாங்கள் சரியான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் பலமானது. மேலும், அவர்களிடம் இடது கை துடுப்பாட்ட வீரர்களும் இருந்தனர். மைதானமும் சிறியது எங்களிடம் இடது கை சுழற்பந்துவீச்சாளர் இருந்தார். அவர்கள் பொறுமை காத்திருக்கலாம்.

எங்களைப் பொறுத்தவரை விக்கெட்டுகளை சரியான இடைவெளிகளில் எடுத்ததே. ஒரு கேப்டனாக என்ன தேவை என்றுதான் கூற முடியும். மற்றபடி அவர்கள்தான் எப்படி வீசுவது என்பதை வகுக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் அந்த விதத்தில் சிறப்பாக செயல்பட்டனர். இந்த சீசன் முழுவதுமே நாங்கள் இந்த இடத்தில் இருக்க பந்துவீச்சாளர்கள் பிரதான காரணம்.

இலக்கை விரட்டும்போது தொடக்க நிலைகளைக் கடந்த பிறகே டூபிளீசிஸ், வாட்சன் இருவருமே முடித்துவிட்டு வந்திருக்க வேண்டும். தேவைப்படும் ரன் விகிதத்தை 6 ஓட்டங்களுக்கும் குறைவாகக் குறைத்து விட்டு, பெரிய ஷாட்களை ஆடி அவுட் ஆக வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன், அவர்களே முடித்துவிட்டு வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்