என்னைக் கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் இன்னும் நடுங்குகின்றனர்! அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்

Report Print Kabilan in கிரிக்கெட்

தன்னைக் கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் இன்னும் நடுங்குவதாக,வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அபாரமாக விளையாடி 424 ஓட்டங்கள் குவித்தார். இதில் 39 சிக்சர்கள் அடங்கும்.

இங்கிலாந்தில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள கிறிஸ் கெய்லுக்கு இது 5வது உலகக்கோப்பை தொடர் ஆகும். இந்நிலையில் கிறிஸ் கெய்ல் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்,

‘இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் எனது தலைக்கு குறி வைக்கிறார்கள். அதனால் முந்தைய போட்டிகளை போன்று, இந்த உலகக்கோப்பை எனக்கு எளிதாக இருக்காது. அப்போது நான் அதிரடியாக ஆடி மிரட்டினேன். ஆனாலும் அவர்களுக்கு என் மீது பயம் இருக்கும்.

இந்த யுனிவர்ஸ் பாஸ் என்ன செய்வார், அவரது திறமை என்ன என்பதை அவர்கள் அறிவார்கள். இவர்தான் உலகின் அபாயகரமான துடுப்பாட்ட வீரர் என்பது எதிரணி பந்து வீச்சாளர்களின் மனதில் நிச்சயம் இருக்கும். கமிராவின் முன் கேட்டால், கெய்லை கண்டு பயமா? இல்லவே இல்லை என்பார்கள்.

Getty Images

இதையே தனியாக கேட்டால், ‘கெய்ல் எப்போதும் கெய்ல் தான்’ என்று கூறுவார்கள். இதை நான் ரசித்து மகிழ்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான போராட்டத்தை நான் எப்போதும் உற்சாகமாக அனுபவித்து ஆடுகிறேன். இது, சில சமயம் ஒரு துடுப்பாட்ட வீரராக, எனக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது.

இத்தகைய சவால்கள் எனக்கு பிடித்திருக்கிறது. ஐ.பி.எல் போட்டி ஓரளவு நன்றாக அமைந்தது. இப்போது நல்ல பார்மில் உள்ளேன். உலகக்கோப்பை நீண்ட தொடர். முடிந்தவரை சூழலை நன்கு கணித்து, சரியான மனநிலையுடன் ஆட வேண்டும் என்பதே எனது நோக்கம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers