டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள்.... சாதனை படைத்த மலிங்கா!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா டி20 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நபர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் இருபது ஓவர் போட்டியானது பலேகேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 174 ரன்கள் குவித்தது.

அணியின் சார்பில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 79 ரன்கள் குவித்திருந்தார்.

இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தாலும், கொலின் டி கிராண்ட்ஹோம் (44), ராஸ் டெய்லர் (48) நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்திருந்தது. இலங்கை அணி சார்பில் லசித் மலிங்கா மற்றும் வாணிது ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இதன்மூலம் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா 74 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தி, இருபது ஓவர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்