உங்கள் தந்தை ஒரு கொலைகாரர்.. குடும்ப ரகசியங்களை வெளியிட்ட ஊடகம்! கோபத்தில் பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ், தனது குடும்பத்தைப் பற்றி அவதூறு பரபரப்பும் கட்டுரையை வெளியிட்ட ஊடகம் மீது கடும் கோபத்தில் உள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆல்-ரவுண்டரான இவர் ஆஷஸ் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில், பிரபல ஆங்கில செய்தி நாளேடான ‘The Sun' பென் ஸ்டோக்ஸின் குடும்ப பின்னணி மற்றும் முக்கிய ரகசியங்களை வெளியிட்டுள்ளது. ‘ஸ்டோக்ஸின் ரகசிய சோகம்’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கட்டுரையில், பென் ஸ்டோக்ஸின் சகோதரரும், சகோதரியும் அவரது வளர்ப்பு தந்தையால் சிறுவயதில் கொலை செய்யப்பட்டனர்.

ஸ்டோக்ஸ் பிறப்பதற்கு முன்பே, அவரது தாயின் முன்னாள் கணவரால் இருவரும் கொல்லப்பட்டனர் என எழுதப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்டோக்ஸின் குடும்பத்தின் சோகமான கடந்த கால விவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனையறிந்த பென் ஸ்டோக்ஸ், செய்தி வெளியிட்ட ஊடகத்தின் மீது கோபமடைந்துள்ளார். அவர் தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் மிகப்பெரிய கடிதம் ஒன்றை இணைத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘அந்த செய்தி நிறுவனம் நியூசிலாந்தில் உள்ள எனது பெற்றோரின் வீட்டிற்கு ஒரு நபரை அனுப்பி, இது பற்றிய விவரங்களை கேட்டுள்ளனர்.

எங்கள் குடும்பத்திற்கு அவமதிப்பு தரும் வகையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த கட்டுரை கடும் கோபத்தை தருகிறது. The Sun நாளிதழ், 31 ஆண்டுகளுக்கும் முன் சென்று எனது குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த வேதனையான நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.

இத்தகைய தரம் தாழ்ந்த மற்றும் இழிவான செயல்களை மேற்கொள்ளும் பத்திரிகைகளை கண்டிக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, எனது குடும்பத்தினர் தங்களுக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியான சம்பவம் தொடர்பான விவரங்களை மறக்க முயன்று, யாரிடமும் கூறாமல் ரகசியம் காக்க மிகுந்த அக்கறை எடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று The Sun நாளிதழ், நியூசிலாந்தில் உள்ள எனது பெற்றோரின் வீட்டிற்கு ஒரு நிருபரை அனுப்பி இந்த விவரத்தை கேட்டு அவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியுள்ளனர். மக்களின் தனிப்பட்ட சோகத்தை வைத்து, தங்களின் முதல் பக்கத்தை நிரப்புவது சரியானது என The Sun நினைக்கிறது.

எனது பெற்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைக்க, எனது பெயரைப் ஒரு சாக்காக பயன்படுத்துவது முற்றிலும் அருவருப்பானது. எனது பெற்றோர், மனைவி, குழந்தைகள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை ஊடகங்கள் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டேன். இது பத்திரிகை ஊடகங்களின் மிகக் கீழ்த்தரமான செயல், இதன் விளைவாக ஏற்பட்ட பேரழிவைப் பொருட்படுத்தாமல், அதனால் தங்களுக்கு வரும் லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது.

இது முற்றிலும் ஒழுங்கற்றது. கட்டுரையில் கடுமையான தவறுகளும் உள்ளன. இது கடும் சேதத்தை எங்கள் குடும்பத்திற்கு தந்திருக்கிறது. நாம் அனைவரும் பத்திரிகைகள் எவ்வாறு நடந்துகொள்ள அனுமதிக்கிறோம் என்பதை தீவிரமாக ஆராய வேண்டும். இது இப்போது பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தாலும், தயவு செய்து இனி எனது குடும்பத்தின் தனிப்பட்ட விவரங்களை மதிக்க சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்