பாகிஸ்தானில் விளையாடுவது உறுதி! இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி திட்டமிட்டபடி பங்கேற்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தால் சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. இந்நிலையில் தான், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவித்தது.

ஆனால், பாதுகாப்பு காரணம் கருதி இந்தத் தொடரில் பங்கேற்க விரும்பவில்லை என, இலங்கை அணித்தலைவர் மலிங்கா, முன்னாள் அணித்தலைவர் மேத்யூஸ், திசாரா பெரேரா, தனஞ்செய டி சில்வா, லக்மல் உள்ளிட்ட பல வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, விளையாட மறுத்த வீரர்கள் இல்லாமல் லஹிரு திரிமன்னே தலைமையில், தசுன் ஷனாகா, ஏஞ்சலோ பெரேரா உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

அதன் பின்னர், பாகிஸ்தான் செல்ல இருக்கும் தங்கள் அணிக்கு பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அங்குள்ள நிலைமை குறித்து ஆராய வேண்டும் என்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் பாகிஸ்தானிடம் அறிவுறுத்தியது.

அதற்கு பதிலளித்த பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் வந்து விளையாடும் இலங்கை அணிக்கு ஆபத்து ஏதும் நேராது என்று உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் பங்கேற்கும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி, வரும் 27ஆம் திகதி கராச்சியில் நடக்க உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்