மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா டெஸ்ட் போட்டியில் வைத்துள்ள 400 ஓட்டங்கள் சாதனையை முறியடிக்க இந்திய வீரர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று அஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
அடிலெய்டில் பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
வார்னரின் முச்சதம், லாபுசாங்கேயின் சதம் ஆகியவற்றால் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 335 ஓட்டங்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் குவிப்பு சாதனையை பிரையன் லாரா வைத்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக லாரா 400 ஓட்டங்கள் சேர்த்ததே இதுவரை சாதனையாக இருக்கிறது.
ஆனால், லாராவின் சாதனையை எட்டுவதற்கு வார்னருக்கு 65 ஓட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், திடீரென டிக்ளேர் செய்வதாக அணித்தலைவர் பைன் அறிவித்தார்.
இந்த நிலையில் செய்தி ஊடகம் ஒன்றில், லாராவின் சாதனையை முறியடிப்பீர்கள் என எதிர்பார்த்தோம். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, இனிவரும் காலங்களில் யாருக்கு எந்த வாய்ப்பு கிடைக்கும், யார் முறியடிப்பார் என நினைக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு வார்னர், என்னால் லாராவின் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், லாராவின் சாதனையை முறியடிக்கும் ஒருவீரரின் பெயரை நான் குறிப்பிடமுடியுமென்றால், அது இந்திய வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. உறுதியாக அவரால் லாராவின் 400 ஓட்டங்கள் சாதனையை முறியடிக்க முடியும் என்றார்.